ஞாயிறு, 28 மே, 2017

மாட்டிறைச்சி விவகாரம்…மோடிக்கு வலுக்கும் எதிர்ப்பு- கேரளா உட்பட 4 மாநிலங்கள் கைகோர்ப்பு!

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் மாடுகள் விற்பனைக்கும் மாட்டிறைச்சிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு கேரளா முதலில் எதிர்ப்புத் தெரிவித்தது. அதனையடுத்து கர்நாடகம், மேகாலயா, மிசோராம் ஆகிய மாநிலங்களும் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
பசு, எருமை, அதன் கன்றுக் குட்டிகள், ஒட்டகம் போன்றவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கவோ வாங்கவோ கூடாது என மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும், இறைச்சி பிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரம்ஜான் நோன்பு தொடங்கும் நேரத்தில் இந்தத் தடை உத்தரவு அறிவித்து இருப்பதற்கு இஸ்லாமிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. மத்திய அரசின் தடை உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நேற்று நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தது. பாஜக அலுவலகம் முன்பு காங்கிரசார் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிடும் போராட்டம் நடத்தினார்கள்.
முதல்வர்கள் எதிர்ப்பு
கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரள மாநில அரசும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகம், மேகாலயா, மிசோராம் மாநில அரசுகளும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

காங்- கம்யூ. இணைந்து போராட்டம்
கேரளாவில் மத்திய அரசின் சட்டத்துக்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்கு ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினரும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மாட்டுக்கறி திருவிழா
நேற்று ஒரே நாளில் மட்டும் 210 இடங்களில் மாட்டுக்கறி திருவிழா நடத்தி பொதுமக்களுக்கு விருந்து அளித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்தும் இன்றும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

மோடிக்கு கடிதம்
இந்நிலையில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,’ கேரள மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். இவர்கள் காளைகள், கன்றுகளை நம்பியே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். தாங்கள் வளர்க்கும் மாடுகள் வயது முதிர்ந்து விட்டால் அவற்றை கடைகளில் விற்பனை செய்து தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள்.

தற்கொலை பெருகும்
இந்தநிலையில் காளைகளை விற்க கூடாது என்று சட்டம் வரும்போது அந்த மாடுகளை விவசாயிகள் கொன்று புதைக்கத் தான் வேண்டும். அப்படி ஒரு நிலை வரும்போது ஏழை விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைமை ஏற்படும்.

ரம்ஜானுக்கு குறி
தற்போது ரமலான் நோன்பு சமயத்தில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவது சிறுபான்மை மக்களுக்கு எதிரானது ஆகும். மத்திய அரசு தன்னிச்சையாக ஒரு முடிவு எடுத்து அறிவித்து இருப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

திரும்பப் பெறவேண்டும்
இதுபோன்ற தீவிர நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு மாநிலங்களின் ஆதரவை பெற்று இருக்க வேண்டும். எனவே இந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகம் எதிர்ப்பு
கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் உத்தரவில் கர்நாடக அரசுக்கு உடன்பாடு இல்லை. மாட்டு இறைச்சிக்கு தடைவிதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. மாநில அதிகார வரம்புக்கு உட்பட்டது, எனவே நாங்கள் தடையை அமல்படுத்த மாட்டோம் ‘ என்று கூறியுள்ளார்.

மேகாலயா, மிசோரம்
மேகாலயா மாநில அமைச்சர் ஜெனித்சங்மா கூறுகையில், மத்திய அரசு சர்வாதிகார போக்குடன் மாநில அரசுகளை வழி நடத்திச் செல்ல நினைக்கிறது. மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்க தடைவிதித்து இருப்பதால் மத்திய-மாநில அரசுகளின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். இதேபோல் மிசோராம் மாநில அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமைதி காக்கும் தமிழகம்
மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக முதல்வர் ‘மத்திய அரசின் ஆணையை முழுமையாகப் படித்துவிட்டு முடிவை அறிவிப்போம் ‘ என்று கூறி அமைதியாகிவிட்டார். இது தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
http://kaalaimalar.in/four-states-against-modi-beef-banned-issue/