சனி, 3 ஜூன், 2017

விமானத்தில் செல்ல கத்தியுடன் வந்த பெண் எம்.பி.,!

புதுடில்லி: உ.பி., மாநிலத்தை சேர்ந்த பா.ஜ., பெண் எம்.பி., விமானத்தில் செல்ல கத்தியுடன் வந்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.உ.பி., மாநிலம், பாராபங்கி லோக்சபா தொகுதியின் பா.ஜ., எம்.பி., பிரயங்கா சிங் ரவாத். இவர், நேற்று டில்லியில் இருந்து லக்னோ செல்வதற்காக, டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்திற்கு வந்தார். அவரது கைப்பையை, எக்ஸ்ரே கருவி மூலம் சோதனை செய்த, மத்திய தொழிலக பாதுகாப்பு படை எனப்படும் சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள், அதில் கத்தி ஒன்றை கண்டுபிடித்தனர். அதை எடுத்து கொண்டு விமானத்தில் செல்ல கூடாது என்பதற்கான விதிமுறைகளை எம்.பி.,க்கு எடுத்து உரைத்தனர். அதை பெண் எம்.பி., ஏற்க மறுத்தார். அது கத்தியே அல்ல. சாவி வளையம் என சாதித்தார். ஒரு கட்டத்தில், சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் மீது புகார் கொடுப்பேன் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

ஏர் இந்தியா அதிகாரிகள் சமாதானம் இந்த சூழ்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் அந்த கத்தியை விமானத்தில் பாதுகாப்பான பகுதியில் வைப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகே சமாதானமடைந்த பெண் எம்.பி., விமானத்தில் ஏறினார். விமானம் தாமதமானதால் பதட்டத்தில் இருந்த பிற பயணிகள் ஒரு வழியாக நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
http://kaalaimalar.in/bjp-mp-priyanka-singh-rawat-knife-aeroplane/