வியாழன், 8 ஜூன், 2017

காற்று மாசுபாட்டுக்கு தீர்வு - CO2வை உறிஞ்சும் இயந்திரம்! June 08, 2017




உலகிலேயே முதன் முறையாக கரியமில வாயுவை நேரடியாக உறிஞ்சும் இயந்திரத்தை சுவிட்சர்லாந்த் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 

கிளைம்வொர்க்ஸ் என்ற நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி காற்றிலிருந்து நேரடியாக கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி, காய் கறிகளை உற்பத்திக்கு பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 200 கார்களிலிருந்து வெளியாகக்கூடிய சுமார் 900 டன் கார்பன் ஆக்ஸைடை உறிஞ்சும் திறனுள்ள இந்த எந்திரம், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

காற்றிலிருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை ஒரு வடிகட்டி மூலம் ரசாயன படிவுகளாக இந்த இயந்திரம் சேகரித்து, 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலையில் தனியே பிரித்து எடுக்கிறது.  இவ்வாறு தனியே பிரித்தெடுக்கப்பட்ட CO2 வாயு, நிலத்தடியில் பொருத்தப்பட்டுள்ள குழாய் வழியே பசுமை இல்லம் போன்ற அமைப்பில் வெள்ளரி, தக்காளி உள்ளிட்ட காய்கறிச் செடிகளுக்கு அனுப்பப்படுகிறது.  காற்று மாசுபாட்டை குறைப்பதில் இந்த தொழில்நுட்பம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. 

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி, சர்வதேச  சராசரி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியசிற்குள் கட்டுப்படுத்துவதில் இத்தகைய கண்டுபிடிப்புகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு முதலே காற்றிலிருந்து நேரடியாக மாசுபாட்டை உறிஞ்சும் முயற்சியில் ஸ்விஸ் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நமது அடுத்த தலைமுறைகள் வசிப்பதற்கு, வாழ்வதற்கு தகுதியுடையதாக பூமிப் பந்தை விட்டுச் செல்லும் கடமை, பிரபஞ்சத்தின் குடிமகன்கள் ஒவ்வொருக்கும் உள்ளது. அந்த வகையில் உயிர்கள் வசிப்பதற்கு ஏற்றதாய் திகழும் ஒரே உலகின் இருத்தலை நீட்டிக்க மாசுக்குறைப்புக்கான கண்டுபிடிப்புகள் அவசியம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  

Related Posts: