சனி, 1 ஜூலை, 2017

நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்தது! July 01, 2017

நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்தது!


நாடு முழுவதும் ஒரே மாதிரியான, ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இதனை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் மணி அடித்து தொடங்கி வைத்தனர். 

வண்ண வண்ண விளக்குகளில் ஜொலித்தது நாடாளுமன்றம். ஒரே நாடு, ஒரே வரி என்ற 14 ஆண்டு கனவை நனவாக்கும் வகையில் ஜிஎஸ்டி என்ற சரக்கு மற்றும் சேவை வரிக்காக சுதந்திரம் அடைந்த பின் 4-வது முறையாக நள்ளிரவில் நாடாளுமன்றம் நடைபெற்றது. 

முன்னாள் பிரதமர் தேவகவுடா, தொழிலதிபர் ரத்தன் டாடா, பாஜக தலைவர் அமீத் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட பிரபலங்களால் நிரம்பி வழிந்தது நாடாளுமன்ற மைய மண்டபம்.

பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோரை வரவேற்று அழைத்து வந்தனர்.

முதலில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஜி.எஸ்.டி குறித்து உரையாற்றினார். அப்போது அவர், ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவது நள்ளிரவில் நடைபெறும் ஒரு வரலாற்று சாதனை என்றார். 

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், ஊழல்,கருப்பு பணத்தை ஒழிக்க ஜிஎஸ்டி உதவியாக இருக்கும் என்றார். பல வரிகள் விதிக்கப்பட்டதால் ஏற்பட்ட சிக்கல்கள் இனி இருக்காது என்று தெரிவித்தார். 

நிறைவாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் ஜிஎஸ்டிக்கு ஒப்புதல் அளித்ததை பெருமையாக கருதுவதாகக் கூறினார். 

பின்னர், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இணைந்து மணியடித்து தொடங்கி வைத்தனர்.  

இதனையடுத்து, நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. நள்ளிரவு நடைபெற்ற கூட்டத்தை, காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.