சனி, 1 ஜூலை, 2017

கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு! July 01, 2017

கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு!


கதிராமங்கலத்தில் ONGC நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 9 பேரின் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, கைதான அனைவரும் சிறையிலடைக்கப்பட்டனர். 

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசியின் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 46 நாட்களாக பொதுமக்கள், விவசாயிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் எண்ணெய் வெளியேறி தீ பிடித்ததால், பார்வையிட வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினர் ஊருக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் வைக்கோல் வைத்து தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே போலீசார் மற்றும் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானவர்களை போலீசார் கைது செய்தனர். கதிராமங்கலத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் மீது, 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 9 பேரையும் கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து 9 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.