வெள்ளி, 9 ஜூன், 2017

நெடுஞ்சாலையோரங்களில் உள்ள ராணுவ கேண்டீன்களில் மதுபானம் விற்கப்படுவது குறித்து பதிலளிக்க உத்தரவு! June 09, 2017




நெடுஞ்சாலையோரங்களில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேண்டீன்களில் மதுபானம் விற்கப்படுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உள்ள மதுக்கடைகள், மதுக் குடிப்பகங்கள் ஆகியவற்றை மார்ச் 31ஆம் தேதிக்குள் மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனை அடுத்து, நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் உள்ள மது விற்பனை நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. 

இது, உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் உள்ளதால், விமான நிலையங்களில் உள்ள மதுக் கடைகளை மூடவும், ராணுவ கேன்டீன்களில் மது விற்பனைக்குத் தடை விதிக்கவும் உத்தரவிடக் கோரி சாகுல் ஹமீது என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேண்டீன்களில் மதுபானம் விற்க அனுமதித்தது எப்படி? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், டாஸ்மாக் நிர்வாகம், மது விலக்குப் பிரிவு ஏ.டி.ஜி.பி உள்ளிட்டோர் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை ஜூலை 24ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Posts: