ஞாயிறு, 11 ஜூன், 2017

பதஞ்சலி அரிசியை பிரபலப்படுத்ததான் பிளாஸ்டிக் அரிசி சர்ச்சையா? June 11, 2017

தமிழகத்தில் சில நாட்களாக பெரும்பான்மை மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வார்த்தை “பிளாஸ்டிக் அரிசி”. உணவகங்களில், அரிசி கடைகளில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுகிறது என்ற தகவல் பரவியதை அடுத்து அமைச்சரே நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்தார். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் அரிசி ஆலை, உணவகங்கள், அரிசி மண்டிகள் என்று தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் என்ற செய்தியில் உண்மையில்லை என்று மறுத்ததோடு, அரிசியில் கலப்படம் செய்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடுமையான எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார். மேலும் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பதற்கான வழிமுறைகளையும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பிரபலங்கள் சிலரும் பிளாஸ்டிக் அரிசி விவகாரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்த வரிசையில், திரைப்பட நடிகர் எஸ்வி.சேகர் இன்று வெளியிட்ட காணொளியில், “பிளாஸ்டிக் அரிசியை விற்பது தேசதுரோக குற்றத்திற்கு சமமானது. எனவே தரமான அரிசியை வாங்குங்கள். தெரிந்த கடையில் வாங்குங்கள், ரசீது வாங்குங்கள், அரிசி வாங்கும் இடம் நம்பிக்கைக்குறியதா என்று பார்த்து வாங்குங்கள்” என்று கூறியுள்ளார்.

ஆனாலும் பிளாஸ்டிக் அரிசி பற்றிய தகவல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பரவுவதால் மக்கள் ஒருவித பீதியில் இருக்கின்றனர். தொடர்ச்சியான புகார்களால் சாப்பிடும் சோற்றை ஒருவித தயக்கத்துடனேயே மக்கள் உண்பதை காண முடிகிறது. பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் பிளாஸ்டிக் அரிசி இதுவரை எங்கும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பது முக்கியமானது.

இதுபோன்ற தொடர் குற்றச்சாட்டுகளால் மக்கள் அடைக்கப்பட்ட அரிசிகளை நோக்கி நகர்வதாகவும், கடந்த சில நாட்களில் அரிசி சில்லறை விற்பனை குறைந்து மொத்தமாக வாங்கப்படுவது அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று பல்வேறு செய்தித்தாள்களில் “பதஞ்சலி இந்தியாவின் அதிக நம்பிக்கைக்குரிய ப்ராண்ட் தரமான அரிசியை நாட்டிற்கு அறிமுகப்படுத்துகிறது; அனைத்தையும் விட பதஞ்சலி அரிசி அருமை” என்ற வாசகங்களோடு பதஞ்சலி நிறுவனத்தின் “பதஞ்சலி அரிசி” விளம்பரம் வந்துள்ளதை சமூக வலைதளவாசிகள் சந்தேகத்துடன் அணுகத் தொடங்கியுள்ளனர்.



பிளாஸ்டிக் அரிசி பற்றிய தொடர்ச்சியான புகார்கள் பதஞ்சலி நிறுவனத்தின் அரிசியை பிரபலப்படுத்த திட்டமிட்டு பரப்பப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுவதாக வலைதளவாசிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

முன்பு நெஸ்ட்லே நிறுவனத்தின் நூடுல்ஸ் தரமற்றது என்று அறிவிக்கப்பட்டு அது தடை செய்யப்பட்டது. அதன்பின் பதஞ்சலி நூடுல்ஸ் மக்களிடையே பிரபலப்படுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றனர் சமூகவலைதளவாசிகள்.

அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் சாத்தியமா என்று கோவையைச் சேர்ந்த வேளாண் ஆய்வாளர் பிரபுவிடம் கேட்டபோது “அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்வதற்கு 100 சதம் வாய்ப்பு இல்லை என்று ஆரம்பத்திலேயே மறுக்கிறார். அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் அளவிற்கு நம் வீட்டுப் பெண்கள் முட்டாள்கள் இல்லை, மேலும் அரிசியில் கலப்படம் இருந்தால் அதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம், மேலும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்பதால் அதில் எந்த வித லாபமும் வியாபாரிகளுக்கு இல்லை, பிளாஸ்டிக் அரிசியின் உற்பத்தி செலவு அதிகம் அதனால் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் சாத்தியமே இல்லை. பிளாஸ்டிக் அரிசி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்" என்கிறார்.

பெண்மணி ஒருவர் அரிசி உருண்டை ஒன்றை தரையில் போட்டு அது தரையில் பட்டதும் எழும்புகிறது. அப்படி அது எழும்புவதற்கு பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருப்பதே காரணம் என்று கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவுகிறது. அது குறித்து ஜப்பானில் ஆராய்ச்சி படிப்பு படித்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவரும் ஆராய்ச்சியாளர் சுதாகர் பிச்சைமுத்துவிடம் கேட்ட பொழுது “பிளாஸ்டிக் அரிசியின் பீதிக்கு மிக முக்கிய காரணம் வேக வைத்த சாதத்தை ஆற வைத்து நன்கு பிசைந்து உருட்டும் போது அவை பந்து போல இறுகுவதுதான். அரிசியில் இரண்டு விதமான ஸ்டார்ச் மூலக்கூறுகள் உள்ளது. ஒன்று அமிலோஸ் மற்றொன்று அமிலோ பெக்டின். சுடு நீரில் அரிசியைப் போடும் போது அமிலோ பெக்டின் ஸ்டார்ச் மூலகூறுகள் சங்கிலி போன்ற நீண்ட‌ பிணைப்பில் இருந்து உடைந்து வெளியேறுகிறது. இந்த ஸ்டார்ச் மூலக்கூறுகள் வெளியேற்றத்தால் அவை மிருதுவாகி, பசை போல் ஒட்டும் தன்மையினை பெறுகின்றன.

இந்திய அரிசியினை ஒப்பிடும் போது தென் கிழக்கு ஆசிய நாடுகளில் (கொரியா, சீனா, தைவான், ஜப்பான்) உள்ள அரிசியில் அதிக அளவு அமிலோபெக்டின் ஸ்டார்ச்சும், மிகக்குறைந்த அளவே அமிலோஸ் ஸ்டார்ச்சும் உள்ளது. ஆகவே தான் இந்த நாடுகளில் உள்ள அரிசி சமைத்த பின் அதிக ஒட்டும் தன்மை பெறுகிறது. இப்படித்தான் நம் ஊர் அரிசியிலும் ஸ்டார்ச் வெளியேறும் போது அவை ஒட்டும் தன்மை பெறுகிறது. இதனை நன்கு கையால் பிசைந்து அழுத்தம் தரும் போது அவை பந்து போல் இறுகிக் கொள்கிறது.

மற்றொன்று தரையின் மீது இந்த சோற்று உருண்டையினை போடும் போது தரையானது சமமான‌ எதிர் விசையினை சோற்று உருண்டை மீது செலுத்தும் போது அவை பந்து போல் குதிக்கும். இதே இந்த சோற்று உருண்டையினை ஒரு துணி மீது போட்டால் அதே அளவிற்கு குதிக்காது, காரணம் துணி மிகக் குறைந்த எதிர் விசையினை மட்டுமே சோற்று உருண்டையின் மீது செலுத்தும். ஆகவே, சுடு சோற்றில் நிகழும் ஸ்டார்ச் மூலக்கூறுகள் வெளியேற்றத்தினை புரிந்து கொண்டால் பிளாஸ்டிக் அரிசி என்பது வீண் வதந்தி என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள்.” என்கிறார். மேலும் பிளாஸ்டிக் அரிசி குறித்த சந்தேகத்தை தீர்க்கும் விதமாக தனது பக்கத்தில் தானே ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளார்.


சமூக வலைதளங்களில் பிளாஸ்டிக் பாலீதின் பைகளை ஒரு இயந்திரத்தில் போடுவது போலவும் இறுதியில் அது அரிசி போன்ற வடிவில் வருவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன் உண்மைத் தன்மை குறித்து சென்னையில் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி செய்யும் தொழில் முனைவோரான வடிவேல் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது “பாலிதின் பைகளை அந்த இயந்திரத்தில் போட்டு அது பல்வேறு வினைகளுக்குப் பிறகு பிளாஸ்டிக் பொருட்கள் செய்வதற்கு ஏற்ற (LDPE virgin granules) மூலப்பொருளாக மாறுகிறது. அதை வைத்துதான் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அது உண்மையில் அரிசி போன்று இருக்காது, அதை அரிசியில் கலந்தால் எளிதில் கண்டறிந்து விடலாம்” என்கிறார்.



பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகளில் உண்மை இல்லை அதனால் பொதுமக்கள் யாரும் பயப்படத் தேவை இல்லை. ஒருவேளை அரிசியில் கலப்படம் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டால், கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

நூடுல்ஸ் போன்ற உணவுகள் எப்போதாவது சாப்பிடுபவை. ஆனால் அரிசி என்பது நம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்ட ஒன்று. தமிழக மக்களில் பெரும்பான்மையானோர் மூன்றுவேளையும் அரிசி உணவுகளை சாப்பிடுபவர்களே. அதை உண்பதில் தயக்கத்தை ஏற்படுத்துவது மக்களிடம் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தும். இதுகுறித்து அரசு மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த பிளாஸ்டிக் அரிசி சர்ச்சை முடிவுக்கு கொண்டு வந்தால் போதும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Related Posts: