வெள்ளி, 23 ஜூன், 2017

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசுக்கு கெடு! June 23, 2017

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசுக்கு கெடு!


கீழடியில் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதிக்குள் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க, மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை மூலம் மேற்கொள்ளபட்ட ஆய்வுகளில், தமிழர்களின் பழங்கால நகரம் மற்றும் 3 ஆயிரத்திற்கும்  அதிகமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இவற்றை கொண்டு, கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட வேண்டும் என சென்னையை சேர்ந்த கனிமொழி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு மீதான விசாரணையின் போது, தமிழக அரசின் சார்பில் கீழடியில் 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டததாகவும், இதனை தொடந்து அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு, தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாக்கும் கடமை தமிழக அரசுக்கு உண்டு என்றும், அருங்காட்சியகம் அமைக்க இடம் மட்டும் கொடுத்தால் போதாது, வேறு பல உதவிகளையும் மாநில அரசு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

மேலும், கீழடியில் வரும் ஆகஸ்ட் 24ம் தேதிக்குள் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அருங்காட்சியப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து, மத்திய, மாநில அரசுகள் தரப்பில் தகவல் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை கீழடி அகழாய்வு பணியை தொடர அனுமதிக்க உத்தரவிடக் கோரிய மற்றொரு மனுவும் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. 

இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை இயக்குனர், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை முதன்மை செயலர், தமிழக தொல்லியல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.