வெள்ளி, 23 ஜூன், 2017

ட்ரம்புக்கு கொலைமிரட்டல் விடுத்த ஜானி டெப்! June 23, 2017

ட்ரம்புக்கு கொலைமிரட்டல் விடுத்த ஜானி டெப்!


அமெரிக்காவில் நடைபெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகர் ஜானி டெப், அதிபர் டொனால் ட்ரம்பை பற்றி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘பைரட்ஸ் ஆப் தி கரீபியன்’ திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் ஜானி டெப். ஜாக்ஸ் ஸ்பாரோவை திரையில் பார்த்தாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குஷியாகிவிடும் அளவிற்கு அவர் பிரபலம். இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் ஜானிடெப், அதிபர் ட்ரம்புக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொணியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இசை நிகழ்ச்சியில் ஜானி டெப் பேசும்போது, டொனால்ட் ட்ரம்பை இங்கு அழைத்து வரலாமா என விளையாட்டாக ஒரு கேள்வி எழுந்தது. அப்போது ஜானி டெப்,  ‘கடைசியாக அதிபர் ஒருவரை, நடிகர் படுகொலை செய்தது எப்போது’ என கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர், ‘நான் ஒரு நடிகனே கிடையாது, என்னுடைய பொருளாதார தேவைக்காக பொய் சொல்லிக்கொண்டிருக்கிறேன்’ எனக்கூறி பீதியை கிளப்பியுள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க காவல்துறை அதிகாரிகள், அதிபரின் பாதுகாப்பு குறித்து தாங்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள ஜானி டெப் கூடிய விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 1865ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஆப்ரஹாம் லிங்கனை, ஜானி வில்க்ஸ் பூத் என்ற நடிகர் தான் சுட்டுக்கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.