செவ்வாய், 11 ஜூலை, 2017

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடையில்லை! July 11, 2017




இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 

இதன் காரணமாக இறைச்சிக்காக மாடுகளை விற்க நாடு முழுவதும் இருந்த தடை விலகியுள்ளது. மத்திய அரசு கடந்த மே மாதம் இறைச்சிக்காக மாடுகளை விற்க கட்டுப்பாட்டுகள் விதித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி கெஹர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மன், மாட்டிறைச்சி தொடர்பாக மத்திய அரசு புதிய திருத்தங்கள் கொண்டுவர இருப்பதாக தெரிவித்தார். தற்போது இந்த சட்டத்திற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளதால், இதனை செயல்படுத்த முடியவில்லை என கூறினார். 

எனினும், மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடையை நீக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தனர். அதே நேரத்தில் இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு எதிரான மத்திய அரசின் தடையை எதிர்க்கும் மனுதாரர்கள், மாநில உயர்நீதிமன்றங்களை நாடவும் அறிவுறுத்தினர். 

Related Posts: