ஞாயிறு, 16 ஜூலை, 2017

மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளுவதா ? July 16, 2017

மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளுவதா ?


மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு தடை விதிக்கும் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா ? என்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதனை ஈடுபடுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னையை சேர்ந்த அமைப்பு ஒன்று, உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, உரிய இழப்பீடு வழங்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட 30 பேர் பலியாகியுள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அந்த அமைப்பு தகவல் பெற்று மனுவில் குறிப்பிட்டுள்ளது. 

இதன் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது, மனித உரிமை மீறல் எனத் தெரிவித்த உயர்நீதிமன்றம், இதற்கான மத்திய அரசின் தடை சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா ? என்பதை உறுதி செய்யுமாறு,மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Posts: