Authors
புல்வாமா தாக்குதல் தொடர்பாக முன்னதாகவே உளவுத்துறை எச்சரித்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என மத்திய அரசுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று (பிப்.25) நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மமதா பானர்ஜி, புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து உரையாற்றினார்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் பாஜக அரசானது வி.ஹெச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ சக்திகளுடன் இணைந்து நாட்டு மக்களின் ஒற்றுமையை மத ரீதியில் பிரிக்க சதி செய்வதாக தெரிவித்த மமதா, நாடாளுமன்ற தேர்தல் ஆதாயத்திற்காக பாஜக போர் பதற்றத்தை உருவாக்குவதாகவும் குற்றம்சாட்டினார்.
“புல்வாமா தாக்குதல் நிகழ்ந்தபோது மோடி என்ன செய்து கொண்டிருந்தார்? உங்களுக்குதான் உளவுத்துறை முன்னதாகவே தாக்குதல் நடக்க உள்ளதை கண்டறிந்து சொல்லியதே, அதன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? வான்வழியாக வீரர்களை அழைத்துச் செல்லாமல் சாலை வழியாக அழைத்துச் சென்றது ஏன்? வீரர்களை அழைத்துச் செல்லும் முன்பாக சாலைகளை முன்கூட்டியே சோதனையிடாதது ஏன்?” என மத்திய அரசை நோக்கியும், பிரதமர் மோடியை நோக்கியும் மமதா பானர்ஜி ஏராளமான கேள்விகளை அடுக்கினார்.
“உளவுத்துறை எச்சரிக்கை இருந்தபோதும் வீரர்களை பாதுகாக்காதது ஏன்? ஏனெனில், வீரர்களை பலி கொடுத்து, அவர்களின் உடல்களைக் கொண்டு மத்திய அரசு தேர்தல் ஆதாயம் அடையப் பார்க்கிறது. நமது வீரர்களின் ரத்தத்தைக் கொண்டு அரசியல் செய்வதை அனுமதிக்கக்கூடாது” என்று மமதா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
மேலும், "சர்வாதிகாரி மோடி மற்றும் அமித்ஷாவை அதிகாரத்தில் இருந்து கீழிறக்கி நாட்டை காப்பாற்றுவோம்" என்றும் கட்சித் தொண்டர்கள் இடையே மமதா பானர்ஜி உரையாற்றினார்.
இதனிடையே, மமதா பானர்ஜியின் இத்தகைய குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவின் மேற்குவங்க தலைவர் திலீப் கோஷ், காஷ்மீரில் இத்தகைய தாக்குதல் நடைபெறுவது இதுதான் முதல்முறையா என கேள்வி எழுப்பியதுடன், பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டே மமதா பானர்ஜி இத்தகைய குற்றச்சாட்டுகளை எழுப்புவதாக தெரிவித்தார். மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அடித்தளம் ஆட்டம் கண்டு வருவதை மமதா உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
source: ns7.tv
http://ns7.tv/ta/tamil-news/india-editors-pick/26/2/2019/mamata-banarji-risen-plenty-allegation-against-bjp-pulwama