புதன், 27 பிப்ரவரி, 2019

ராணுவ கண்காணிப்பை மீறி பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது எப்படி? February 27, 2019

Authors
Image
பாகிஸ்தான் ராடார் அமைப்புக்கே தெரியாமல் அந்நாட்டு எல்லைக்குள் இந்திய விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது, பாகிஸ்தான் விமானப்படையின் திறனை கேள்விக்குள்ளாகி உள்ளது. உண்மையில் இந்தியாவின் பலம் என்ன? பாகிஸ்தானின் பலவீனம் என்ன?
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட சூடு மறைவதற்குள், பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பாலகோட், சக்கோதி, முஸ்பராபாத் ஆகிய இடங்களில் இந்திய விமானப்படையின் மிராஜ் ரக விமானங்கள், அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதலில் 300 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என்று மத்திய அரசும், எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் அரசும் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை விட, பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்து, 19 நிமிடங்களில் வரை துல்லிய தாக்குதல் நடத்தி முடித்துவிட்டு திரும்பிய, இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் கண்காணிப்பு வளையத்தை கடந்து எவ்வாறு தாக்குதலை நடத்தின என்ற கேள்வி எழுந்துள்ளது..
கடந்த 1971ம் ஆண்டு வங்கதேச பிரிவினையின் போது நடத்தப்பட்ட விமான தாக்குதலுக்கு பிறகு, தன்னை திறன்வாய்ந்த விமானப்படைகளில் ஒன்றாக கருதிக் கொண்டிருந்த பாகிஸ்தான், இந்தியாவை ஒப்பிடுகையில் திறன் குறைந்தவையாக உள்ளது என்று defencedotpk என்ற பாகிஸ்தான் இணையதளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. 
இதன் மூலம் பாகிஸ்தான் வான்வெளி கண்காணிப்பு அமைப்பும், ஜாமர்களும், திறம்பட செயல்படுபவை அல்ல என்பதும், இவ்வளவு குறைந்த நேரத்தில், இத்தகைய தாக்குதலை கண்டறிந்து செயல்படுவதற்கான திறனை பாகிஸ்தானின் வான்வெளி கண்காணிப்பு அமைப்பு பெற்றிருக்கவில்லை என்பதை அந்நாட்டு இணையதளமே சுட்டிக்காட்டுகிறது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்த A-50 AWAC விமானங்கள் இந்தியாவால் வாங்கப்பட்ட போதே, பாகிஸ்தானின் முன்னாள் ஏர் மார்ஷல், அயாஸ் அகமது கான், பாகிஸ்தானை எச்சரித்திருந்தார். ராடார் மற்றும், மின்னணு கண்காணிப்பு விஷயங்களில் அதிக திறன்கொண்ட இந்த வகை விமானங்களால் பாகிஸ்தானை இந்தியா உளவு பார்க்க ஏதுவாக அமையும் என்றும் எச்சரித்திருந்தார். 
இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே சீனாவுடன் நெருக்கம் காட்டும் பாகிஸ்தான், வான்வெளி பாதுகாப்பில் சீனாவிடமிருந்து போதிய உதவியை பெற தவறிவிட்டதா என்னும் கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு இணையதளமான Global fire power, பாகிஸ்தானிடம் 1,281 பாதுகாப்பு விமானங்கள் உள்ளன என்றும், இந்தியாவிடம் 2,185 விமானங்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது இங்கே நினைவு கூரப்பட வேண்டியுள்ளது. இந்த சூழலிலும் தங்கள் பதிலடி வித்தியாசமாக இருக்கும் என்று  பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பாகிஸ்தான் தீவிரவாதத்தை நம்பியிருப்பதையே காட்டுவதாக உள்ளது.  

source: ns7.tv