
மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் புல்தானா மாவட்டம் லூனாரில் உள்ள சுல்தான்பூர் கிராமத்தில் சுயேட்சைக்கு அளித்த வாக்குகள் பாஜகவுக்கு சென்றதாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்த கேட்கப்பட்ட ஆர்.டி.ஐ தகவலில் வாக்கு எந்திர மோசடி உறுதியாகியுள்ளது.
வாக்கு எந்திரத்தில் முதல் சின்னமாக இருந்த தேங்காய் சின்னம் சுயேட்சை ஆஷா அருண் ஷோரிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், சுல்தான்பூர் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்கு எந்திரத்தில் தேங்காய் சின்னத்திற்கு வாக்களித்தால் பாஜக சின்னத்திற்கு சென்றுள்ளது.
இதுகுறித்து வேட்பாளர் சார்பாக புகார் அளித்தபோது தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்கவில்லை. ஆனால், தொடந்து பல வாக்காளர்கள் புகார் அளித்ததை ஒட்டி தேர்தல் நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு 5 நாட்கள் கழித்து தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், வாக்கு எந்திர மோசடி குறித்து அனில் கல்காலி என்ற ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவல் கேட்டிருந்தார். இதன்கீழ் பதில் அளித்திருக்கும் புல்தானா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாக்கு எந்திரத்தில் மோசடி நடந்திருப்பதை ஒத்துக்கொண்டது.
மேலும், அந்த ஒரேயொரு வாக்கு எந்திரம் குறித்தே புகார் வந்ததாகவும், அதேபோல் மற்ற வாக்கு எந்திரங்களில் மோசடி நடந்திருந்தால் புகார் வந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, ஒரு எந்திர கோளாறை வைத்து எப்படி தேர்தலை சந்தேகப்பட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் புல்தானா மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகிகள்.