ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் RT-PCR பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வருவாய், மருத்துவம் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களை கண்காணித்து, ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் நுழைவதை அனுமதிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 எல்லை சோதனை சாவடிகளில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, கொரோனா பரவுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கிடையே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையத்தில் பயணிகள் எவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பதை பார்வையிட்டார்.
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் தமிழகத்திற்குள் நுழைபவர்களை கண்காணிப்பது முக்கியம் என அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி சான்றிதழ்
கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை கட்டாயமில்லை எனவும் தடுப்பூசி சான்றிதழை காட்ட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது, லண்டன், பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் இருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. விமான நிலையத்தில் உள்ள ஆய்வகம் சுமார் 4 மணி நேரத்தில் முடிவுகளை வழங்குகிறது. மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுகிறது. இந்த வாரம் சென்னை விமான நிலையத்திலும் விரைவு ஆர்டி பிசிஆர் சோதனை செய்யும் வசதியை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 02 08 2021
source https://tamil.indianexpress.com/tamilnadu/kerala-to-tamil-nadu-travel-will-need-covid-19-negative-report-328256/