திங்கள், 30 ஆகஸ்ட், 2021

கேரளா ட்ரெண்டிங்

 

கேரள மாநில ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ. விஷ்னுநாத், 3 மாதங்களில் என்னவெல்லாம் மக்களுக்கு செய்ய முடியும் என நிரூபித்தவர் ஸ்டாலின் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை புகழ்ந்து பேசும் வீடியோ வைலானது. இதையடுத்து, கேரளாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்தது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற மே 7ம் தேதி அன்றே, தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைப் போல, கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.2,000 அளிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். மீதம் ரூ.2,000 ஜூன் மாதம் அளிக்கப்பட்டது. பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 100 நாள் செயல்பாடுகள் பெரிய விமர்சனங்கள் இல்லாமல் அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளாலும் குறிப்பிடும்படியாக பெரிய விமர்சனங்கள் எதுவும் வைக்க முடியவில்லை.

அதே நேரத்தில், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டார். கொரோனா தொற்று பரவல் முதல் அலையின்போது, அதிமுக ஆட்சியில் இருந்தபோது, கேரளாவை பாருங்கள் எப்படி தொற்று பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளார்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். ஆனால், இப்போது, கேரளாவில், தமிழகத்தைப் பாருங்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு சூழல் மாறியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவின் கடந்த 2006-2011 ஆட்சி காலத்தில், திமுக மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் போல, இந்த முறையும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிவிடக் கூடாது என்று மு.க.ஸ்டாலின், கட்சியினரை கண்டிப்புடன் கவனமாக நடத்தி வருகிறார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றபோது, திமுக அரசு அனைவருக்குமானதாக இருக்கும். தங்களுக்கு வாக்களிக்காதவர்களும், ஏன் திமுகவுக்கு வாக்களிக்காமல் போனோம் என்று வருந்தும் வகையில், அரசின் செயல்பாடுகள் இருக்கும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில்தான், கேரள மாநில ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஷ்னுநாத், மூன்று மாதங்களில் என்னவெல்லாம் மக்களுக்கு செய்ய முடியும் என நிரூபித்தவர் ஸ்டாலின் என தமிழக முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த விவாதத்தில் பேசிய விஷ்னுநாத், 2 கோடி குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.4000, 14 வகை மளிகைப்பொருட்கள், மருத்துவர்களுக்கு 30,000, செவிலியர்களுக்கு ரூ.20,000 மற்ற மருத்துவப் பணியாளருக்கு 15,000 ஊக்கத்தொகை, மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம் என ஸ்டாலினின் செயல்களை பட்டியலிட்டு, இவையெல்லாம் கொடுத்த முதல் மந்திரி பினராயி விஜயன் அல்ல. மு.க. ஸ்டாலின் என்று கூறினார். மேலும், மு.க. ஸ்டாலின் செய்த மாற்றங்கள் பற்றி பேசிய விஷ்னுநாத், கேரள மாடல் ஏன் தோல்வியடந்தது என்பது குறித்தும் விளக்கி பேசினார்.

கேரள மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ விஷ்னுநாத், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து கேரளாவில் சமூக ஊடகங்களில் மு.க.ஸ்டாலின் ட்ரெண்டிங் ஆனது.

திமுக அரசு 100 நாட்களை கடந்தும் தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றவில்லை என்று அதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிற நிலையில், கேரள அரசியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் பாராட்டப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. இதனால், திமுகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-name-trending-in-kerala-336980/