தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆளும்கட்சி யாராவது தன்னை புகழ்ந்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் எச்சரித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று வேளாண் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. ஆனால் இந்த புதிய சட்டங்களால் விவசாயிகள் வாழ்வாதாரம் பறிபோகும் என்றும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 9 மாதங்களுக்கும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளிடம் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறப்படும் என தெரித்துள்ளனர். ஆனால், வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரலாம், எக்காரணம் கொண்டும் வேளாண் சட்டங்கள் திரும்ப பெற மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
இந்த நிலையில் மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், 3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது; இந்த சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. வேளாண் சட்டங்கள் வேளாண்மையை அழிப்பதுபோல இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள்; அதனை எதிர்த்து போராட்டமும் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளின் வாழ்வுசெழிக்க 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். அதற்கு எதிர்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளை ஆலோசிக்காமல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை. பல மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளன. எனவே தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரும் தீர்மானத்திற்கு காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தீர்மானத்தின் மீது பேசிய பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் வேளாண் சட்டங்கள் உள்ளன. விவசாயிகளின் வேதனையை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் தீர்மானத்திற்கு முழு ஆதரவை தருகிறோம் என கூறினார்.
விவசாயிகள் மத்தியில் வேளாண் சட்டங்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என பா.ம.க. சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும் போது போராடும் விவசாயிகளுக்கு நான் இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் என கூறினார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.அன்பழகன் பேசும் போது அவசர அவசரமாக தனித் தீர்மானம் கொண்டு வராமல், அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து மத்திய அரசிடம் வலியுறுத்தலாம். அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்க வேண்டும் என கூறினார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது கூறியதாவது;-
சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். வேளாண் சட்டம் மீதான சாதக பாதகங்களை அறிந்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கலாம்; பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வரை பொறுமையாக இருந்து தீர்மானத்தை கொண்டு வரலாம் என கூறினார்.
வேளாண் சட்டத்தில் உள்ள பாதகங்கள் குறித்து குழந்தைக்கு கூட தெரியும்; ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா ? என ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவை முன்னவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஓ.பன்னீர் செல்வம் நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு,இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுதான் என் நிலை என கண்ணதாசன் பாடல் வரியை குறிப்பிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது அது தொடர்பான தீர்ப்பு வந்தபிறகே பேச முடியும் என்று கூறினார்.
வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க மறுத்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
இருப்பினும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
வழக்குகள் வாபஸ்
அடுத்ததாக, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களின் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப் சபையில் அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோரின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புகழ்ந்து பேசினால் நடவடிக்கை
நேற்று சட்டப்பேரவையில், நீதிமன்ற கட்டணம் தொடர்பான திருத்தச் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலினை அவர் வாழ்த்திப் பேசினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டத் துறை அமைச்சர், சட்டமுன்வடிவை அறிமுகம் செய்ய நேரடியாக வரவேண்டும். பதில் அளித்துப் பேசும்போதுகூட சிலவார்த்தைகளை சேர்த்து பேசலாம். திமுக உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு கண்டிப்பான வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் உரைகளின்போதும், பதில் அளிக்கும்போதும் உங்களை உருவாக்கிய, ஆளாக்கிய, நம் முன்னோடிகளை குறிப்பிட்டு வணக்கம் செலுத்தி பேசுவது முறையாக இருக்கும். ஆனால், கேள்வி நேரத்துக்கும், சட்டமுன்வடிவை அறிமுகம் செய்வதற்கும் அதை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் நேரத்தின் அருமையைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இங்கு இருக்கும் அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இது என் கட்டளை என்று கூறினார்.
இந்த நிலையில் இன்று, மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது தி.மு.க. எம்.எல்.ஏ ஐயப்பன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். உடனே முதல்வர் மு.க.ஸ்டாலின், மானியகோரிக்கை மீதான விவாதத்தில் தன்னை புகழ்ந்து பேசினால் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினருக்கு வழங்கப்பட்ட நேரத்தை மனதில் வைத்து பேச வேண்டும். நேற்றே அவை நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என எச்சரித்தேன். எதையும் லிமிட் ஆக வைத்துக்கொள்ளுங்கள். நேற்றே இது தொடர்பாக கட்டளையிட்டேன் என்று எச்சரித்தார்.
விவசாயிகளுடன் ஒரு நாள்
சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின் மோட்டார் வழி நீர் பாசன வசதிக்கு ரூ.12 கோடி செலவிடப்படும் என கூறினார். மேலும், வேளாண்துறை சார்பில் 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியில் உள்ள கிராமத்திற்கு சென்று விவசாயிகள் கருத்தை கேட்டாக வேண்டும். விவசாயிகள் கருத்துக்களைக் கேட்டு அதை தீர ஆராய்ந்து அவர்களுக்கு தீர்வு காண வேண்டும். இதற்காக, ‘விவசாயிகளுடன் ஒரு நாள்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் அனுமதியுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னிர் செல்வம் அறிவித்தார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-highlights-resolution-against-farms-law-cm-warns-praise-speaking-336681/