பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் கோட்டையில் நிறுவப்பட்டிருந்த சீக்கிய மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங்கின் 9 அடி உயர வெண்கலச் சிலை சில நாட்களுக்கு முன் சேதப்படுத்தப்பட்டது.
பாகிஸ்தான் அரசால் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக் – இ – லப்பைக் என்ற வலதுசாரி அமைப்பை சேர்ந்த ரிஸ்வான் உள்ளிட்டோர் சிலையின் இடது கைகளை உடைத்து குதிரை மற்றும் மகாராஜா ரஞ்சித் சிங்கின் உருவத்தை சிதைத்து சாலையில் வீசினர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
அந்த வீடியோவை பார்த்து பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து பாகிஸ்தான் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாகிஸ்தானில் உள்ள கல்வியறிவு இல்லாத நபர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களால் தேசத்தின் கௌரவம் சர்வதேச அளவில் பாதிக்கப்படுகிறது” என கூறியிருந்தார்.
இந்த வன்முறை தொடர்பாக சிலரை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என லாகூரின் தலைநகர போலீஸ் அதிகாரி குலாம் மஹ்மூத் டோகர் கூறினார்.
சிலை தகர்க்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், “சிறுபான்மை சமூகத்தினரிடையே அச்சத்தின் சூழலை உருவாக்கும் இதுபோன்ற தாக்குதல்களை தடுப்பதற்கான தனது கடமையில் இருந்து இஸ்லாமாபாத் முற்றிலும் தவறிவிட்டது. பாகிஸ்தானில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்கள், கலாசார மையங்கள், தனியார் சொத்துகள் சூறையாடப்படுவது வேகமாக அதிகரித்து வருகிறது. சிறுபான்மையினர் நலன் மற்றும் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியது.
இதையடுத்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம்,” இந்தச் சம்பவம் குறித்த இந்தியாவின் கருத்துகள் தேவையற்றது மற்றும் நன்றியுணர்வற்றது” என கூறியது. மேலும் தனது சொந்த சிறுபான்மையினருக்கு எதிரான அரசால் வழங்கப்பட்ட பாகுபாடு மற்றும் போலி அக்கறை என குறிப்பிட்டது.
ரஞ்சித் சிங் மற்றும் லாகூர்
1799-ம் ஆண்டு லாகூர் நகரை தன் 18-வது வயதில் ரஞ்சித் சிங்(1780-1839) கைப்பற்றினார்.
பஞ்சாபின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக இருந்த லாகூர் தாக்குதல்களால் சிதைந்தது. அழிந்து வரும் முகலாய சாம்ராஜ்யம் அதன் ஆதரவையும் பாதுகாப்பையும் நீட்டிக்க முடியவில்லை. ஆப்கானிஸ்தான் படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்களால் அது தாக்கப்பட்டது மற்றும் சில சீக்கிய குழுக்களிடையே மோதலால் பலவீனமடைந்தது. லாகூரில் வசிப்பவர்கள் அதிக வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.
ரஞ்சித் சிங் லாகூரில் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு வந்து அதன் பொருளாதார மற்றும் கலாச்சார பெருமையை புதுப்பித்தார். அவர் தன்னை பஞ்சாபின் மகாராஜாவாக 1801 இல் அறிவித்தார். மேலும் சீக்கியர்களை தவிர மற்ற சமூகங்களுக்கும் மத சகிப்புத்தன்மையுடன் ஆட்சி செய்தார்.
அவர் லாகூர் கோட்டையின் பழுதுபார்ப்புகளைச் செய்தார். இது அக்பர் பேரரசரால் பழைய மண்-செங்கல் கட்டமைப்பால் கட்டப்பட்டது. அதனை ஷாஜகான் மற்றும் அவுரங்கசீப் அழகுபடுத்தி விரிவாக்கினார். மேலும் அதைச் சுற்றி ஒரு சுவரைக் கட்டி அவரது குடியிருப்பு கோட்டையாக அதன் ஒரு பகுதியைப் பயன்படுத்தினார்.
மகாராஜா பாகிஸ்தானில் போற்றப்பட்டது ஏன்?
.
இவரின் ஆட்சிக்காலத்தில் சீக்கிய பேரரசு வட மாநிலங்களில் பெரும் பகுதியில் பரந்து விரிந்திருந்தது. சீக்கிய மத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், இவரின் அமைச்சரவையிலும் கால்ஸா ராணுவத்திலும் பல சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களும் இவரின் ராணுவத்தில் பணியாற்றினர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தான் வீடியோ பதிவர்கள் யூடியூப் போன்ற தளங்களில் மகாராஜாவின் ஒளிரும் உருவப்படத்தை வரையத் தொடங்கினர். அவர்கள் ரஞ்சித் சிங்கின் ‘மதச்சார்பற்ற’ பண்புகளை அடிக்கோடிட்டுக் காட்டினர். மேலும் அவர் பல இந்து மற்றும் முஸ்லீம் அமைச்சர்களை நியமித்ததை நினைவு கூர்ந்தனர். லாகூரின் புகழ்பெற்ற சுனேஹ்ரி மசூதியை சில சீக்கிய போராளிகளால் குருத்வாராவாக மாற்றினர். அதை மீட்டு மீண்டும் முஸ்லிம்களிடம் மகாராஜா ஒப்படைத்ததை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
லாகூர் கோட்டையில் சிலை
சமூக ஆர்வலர்கள், பஞ்சாபி புலம்பெயர்ந்தோர், குறிப்பாக சீக்கியர்கள் மற்றும் பல சிறிய அரசியல் குழுக்களின் தொடர்ச்சியான பிரச்சாரம் காரணமாக மகாராஜாவின் 180 வது நினைவு தினத்தையொட்டி லாகூர் கோட்டையில் ரஞ்சித் சிங்கின் வெண்கல சிலை நிறுவப்பட்டது. குதிரை மீது கையில் வாளுடன் அமர்ந்து இருக்கும் வகையில், சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த மிகப்பெரிய சிலை UK வை சேர்ந்த SK அறக்கட்டளையால் WCLAவிற்கு பரிசாக வழங்கப்பட்டது. குருத்வாரா தேரா சாஹிப், ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜன் தேவ் வீரமரணம் அடைந்த இடத்தில் கட்டப்பட்டது. லாகூர் கோட்டையை ஒட்டி அமைந்துள்ள ரஞ்சித் சிங்கின் சமாதி, உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சீக்கிய சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது.
சிலை மீது தாக்குதல் ஏன்?
பாகிஸ்தானை சேர்ந்த விமர்சகர்கள் Walled City Lahore Authority (WCLA) சிலையை உரிய ஆலோசனை இல்லாமல் நிறுவ முடிவு செய்ததாகவும் அது வணிக காரணத்திற்காக இயக்கப்படுவதாக புகார் கூறுகின்றனர். இருப்பினும், சிலைக்கு அச்சுறுத்தல் அரசியல் தரப்பிலிருந்தும் இஸ்லாமியர்கள் மற்றும் அடிப்படைவாதிகளிடம் இருந்து வருகிறது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ” 2019ல் சிலை நிறுவப்பட்ட பின் சிலை உடைக்கப்படுவது இது மூன்றாவது முறை” என குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 2019 ஆண்டு, சிலை திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இரண்டு பேர் அதை மரக் கம்பிகளால் தாக்கினர். இதன் விளைவாக அதன் ஒரு கை உடைந்து மற்ற பாகங்கள் சேதமடைந்தன. தாக்குதல் நடத்தியவர்கள் ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 2020 ல், மர்ம நபர் ஒருவர் சிலையின் கையை உடைத்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர், “ரஞ்சித் சிங்கின் அவரது ஆட்சியின் போது முஸ்லீம்களுக்கு எதிராக கொடுமை செய்ததால் அவரது சிலை கட்டப்பட்டிருக்கக்கூடாது” என்று போலீசாரிடம் கூறினார்.
source https://tamil.indianexpress.com/explained/why-maharaja-ranjit-singh-statue-vandalised-in-lahore-334221/