27 08 2021
Tamilnadu News Update : தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தனது தாத்தா கருணாநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சியில் அமர்ந்த சமயத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை உச்சத்தை தொட்ட நிலையில, இதனை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அமைச்சரவை பல்வேறு கட்ட பணிகளில் ஈடுபட்டது. இதில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்க மக்கள் முன்வரவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் நிதி வழங்கினர். தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா நிவாரண நிதி பொதுமக்களால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிதி மற்றும் திமுக இளைஞரணியின் வளர்ச்சிக்கு பலரும் நிதி அளித்து வருகின்றனர். இதில் நிதி வழங்குவதற்காக வருவபர்களுக்கு உதயநிதி உடனடியாக தன்னை சந்திக்க அப்பாயின்மென்ட் வழங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் கடந்த 2 நாட்களில் உதயநிதியை சந்தித்து பலரும் நிதி அளித்துள்ளனர். இதில் வேலூர் குடியாத்தத்தைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர் மூதாட்டி ஜெயலட்சுமி(70) அவர்கள் தன்னுடைய பென்ஷன் சேமிப்பு தொகை ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
கடலூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கழக இளைஞரணியின் வளர்ச்சி நிதிக்காக, மாவட்ட செயலாளர் சி.வி கணேசன், மற்றும் இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி ஆகியோர் நிதி வழங்கியுள்னர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ்ச்சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொதுநிவாரண நிதிக்கு, 2019.58 அமெரிக்க டாலரை அதன் தலைவர் ரெங்கராஜன் வழங்கியுள்ளார்.
கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு, நாட்கோ பார்மா (Natco Pharma) நிறுவன ஊழியர்களின் பங்களிப்பாக ரூ.1.09 லட்சத்திற்கான வரைவோலையை ஜி.வாசன் வழங்கியுள்ளார்.
சேலம் மாநகர வ.உ.சி பூ மார்க்கெட் புஷ்ப ஏஜெண்டுகள் முன்னேற்ற சங்கம்’ சார்பில் அதன் தலைவர் ஆர்.எம். ராஜீ அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.5 லட்சத்திற்கான வரைவோலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த கழக நிர்வாகி எஸ்எல் பாலா இளைஞரணியின் வளர்ச்சி நிதிக்காக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார். மேலும் தமிழகத்தில் பல பகுதிகளில் கட்சியை சேர்ந்த பலரும் திமுக இளைஞரணி வளர்ச்சிக்காக நிதி அளித்துள்ளனர். இது தொடர்பான விபரங்களை உயதநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-covid-relief-fund-udhayanidhi-stalin-received-fund/