செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை; 16 சொகுசு கார்கள், 2 கிலோ தங்கம் பறிமுதல்

 sukesh chandrasekar, ammk, ttv dinakaran, இரட்டை இலை, சின்னம், லஞ்சம், டெல்லி காவல்துறை, அமலாக்கத்துறை

Sukesh Chandrasekhar : சுகேஷ் சந்திரசேகரின் சென்னை வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் 16 சொகுசு கார்கள் மற்றும் 2 கிலோ தங்கத்தை கைப்பற்றியுள்ளனர். பணமோசடி விவகாரம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரட்டை இலை சின்னம் வாங்கித் தருவதாக கூறி அமமுக கட்சித் தலைவர் டி.டி.வி தினகரனிடம் பணம் வாங்கியது தொடர்பாக 2017ம் ஆண்டு சுகேஷ் சந்திரசேகர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தற்போது புதிய சோதனைகள் நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. தற்போது சுகேஷ் இருக்கும் ரோஹினி சிறையில் இருந்தவாறே, பண மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக இதே வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். சுகேஷ் மீது 2 டஜனுக்கும் மேற்பட்ட வழக்குகள் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து போடப்பட்டுள்ளது.

சுகேஷ் ஜெயிலில் இருந்தே நம்பர் ஸ்பூஃபிங் செயலி மூலம், செல்போனில் பலருக்கு அழைப்பு விடுத்து பேசியுள்ளார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரியாக தன்னைக் காட்டிக் கொண்டு பலரிடமும் அவரும் அவருடைய கூட்டாளிகளும் ரூ. 200 கோடி வரை மோசடி செய்துள்ளனர்.

சுகேஷின் கூட்டாளிகளாக இருந்த சில இடைத்தரகர்கள், வங்கியாளார் கோமல் பொட்டர் மற்றும் பலரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது என்று காவல்த்துறை கூறியுள்ளது. மொத்தமாக ரூ. 82.50 லட்சம் பணம் மற்றும் 2 கிலோ எடையுள்ள 24 கேரட் தங்கக் கட்டிகளை பொட்டர் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது. கடந்த வாரம் அவரையும், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளது காவல்துறை.

சுகேஷின் மனைவியும், மலையாள படங்களில் சிறிது காலம் நடித்த லீனா மரியா பாலின் வீட்டையும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். சென்னையில் உள்ள சொகுசு பங்களா ஒன்றை சோதனை செய்தது அமலாக்கத்துறை. அது பின்னர் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவியின் “பினாமி” சொத்து என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீட்டின் உள்ளே ஒரு சிறிய திரையரங்கம் உள்ளது என்றும் பிரபலமான நிறுவனங்களின் ஷூ, பைகள் மற்றும் ஆடை தயாரிப்புகளையும் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/enforcement-directorate-raids-premises-of-sukesh-chandrasekhar-335288/