வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

ரூ. 108 கோடி மதிப்பீட்டில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் – முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு

 27 08 2021 Sri Lankan Tamil Refugees : தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் இன்று விவாதம் நடத்தப்பட்டது. இன்று பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இலங்கை தமிழ் அகதிகளின் நலவாழ்வுக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் முக ஸ்டாலின். அந்த அறிவிப்புகளில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்

இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ. 108 கோடி மதிப்பில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என்று கூறினார்.

தொழிற்கல்வி படித்து வரும் இலங்கை தமிழ் அகதி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை அதிகரித்து வழங்கப்படும். இலங்கை தமிழ் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ. 2,500லிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தி அறிவிப்பு. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ. 3000ல் இருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூ. 5000ல் இருந்து ரூ. 20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்பட்டு அறிவிப்பு.

முகாம்களில் வசிக்கு மக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், வசிப்பிடம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு என வாழ்க்கை தரத்தை உயர்த்த ரூ. 317.45 கோடி நிதி வழங்கப்படும்.

இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பங்களுக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் அதற்கான சிலிண்டர் இணைப்பு வசதிகள் உருவாக்கித்தரப்படும்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது மற்றும் சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு இங்குள்ள தமிழர்கள் மட்டும் அல்லாமல் கடல் கடந்து வாழும் தமிழர்களையும் அரவணைக்கும் அரசாக தமிழக அரசு இருக்கும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/3510-houses-will-be-constructed-for-sri-lankan-tamil-refugees-says-mk-stalin-in-assembly-336350/