ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

சென்னைக்கு வயது 382.

 Madras Day Celebrations History Tamil News

Madras Day Celebrations History Tamil News

Madras Day Celebrations History Tamil News : காதல்னா மெரினா, காய்கறினா கோயம்பேடு, கிரிக்கெட்டுனா சேப்பாக்கம், கோயில்களுக்கு மைலாப்பூர் என நம் அன்றாட வாழ்க்கையை செழிப்பாகவும் அழகாகவும் மாற்றும் பெரிய மனசுக்காரன் சென்னை. அந்தக் காலத்து எல்.ஐ.சி பில்டிங், ஸ்பென்சர் பிளாசா முதல் இப்போதையஃ பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி வரை ஆச்சரியப்படுத்த வைக்கும் வித்தைக்காரன் இவன். நியூயார்க்கை மட்டும்தான் ஜொலிஜொலிக்கும் விளக்குகளால் அலங்கரிப்பீர்களா? நானும் சளைத்தவன் அல்ல என்பது போல தன் சாலைகளை மின்விளக்குகளால் அலங்கரித்துக்கொண்டான்.

தன்னுடைய மக்கள் நீண்ட தூரம் நடந்து செல்வதைப் பார்த்துக் கொந்தளித்தவன், ஆங்காங்கே ஏராளமான பிரிட்ஜ், சப்வேக்களை அமைத்துக்கொண்டான். வள்ளுவர் கோட்டம், ஜார்ஜ் கோட்டை முதல் தியேட்டர், பார்க், கையேந்தி பவன்கள், ஸ்டார் ஹோட்டல்கள் என தன்னுடைய மக்கள் பார்த்து மகிழவும் இளைப்பாறவும் வயிறு நிறையவும் ஏராளமான வழிமுறைகளைச் செய்துகொடுத்தான். வெள்ளம், புயல், சுனாமி என தான் எத்தனை துயரங்களை அனுபவித்திருந்தாலும், தன்னுடைய மக்களைக் கூடிய விரைவில் அதிலிருந்து மீட்டெடுக்கும் தன்மையை வளர்த்துக்கொண்டே இருப்பவன். இப்படிப்பட்ட ஏராளமான பெருமைக்குச் சொந்தக்காரன் எப்படிப் பிறந்தான் தெரியுமா?

வரலாறு:

சிங்காரச் சென்னை என கம்பீரமாக அழைக்கப்படும் சென்னை ஒரு காலத்தில் சிறிய கிராமம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், ஒரு காலத்தில் சென்னை பசுமையான ஓர் அழகிய கிராமம். கிழக்கிந்திய கம்பெனி சென்னையை வாங்கியபிறகுதான், கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற ஆரம்பித்தது. ஏராளமான நிறுவனங்கள், ஷாப்பிங் இடங்கள் என மாற்றங்களைக் கொண்டு வந்தனர்.

1688-ம் ஆண்டு, அன்றிருந்த மதராஸ் நகரை முதல் நகராட்சியாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் அறிவித்தார். சென்னைதான் நாட்டின் முதல் நகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு,ராபர்ட் கிளைவ் தன்னுடைய ராணுவத் தளமாக அன்றைய மதராஸ் நகரைத் தேர்வு செய்தார். பிரிட்டிஷ் அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் நான்கு மாகாணங்களில் ஒன்றாக மதராஸ் மாறியது. அன்று முதல், ‘மதராஸ் மாகாணம்’ என்று அழைக்கப்பட்டது. அவ்வளவு ஏன், தற்போதைய கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள பல ஊர்களும், மதராஸ் மாகாணத்திற்குள் உள்ள இடமாக ஒருகாலத்திலிருந்தன.

1939-ம் ஆண்டு, ஆகஸ்ட் 22ம் தேதி, சென்னை நகரம் முறைப்படி நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதி, இந்த நாளையே நகரின் பிறந்த நாளாக மாற்றியுள்ளார்கள். சென்னை பாரம்பரிய அறக்கட்டளையால் 2004-ம் ஆண்டு ‘மெட்ராஸ் டே’ கொண்டாட்டம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக மெட்ராஸ் தேர்வு செய்யப்பட்டது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போதுதான் மெட்ராஸ், தமிழ்நாடாக மாறியது. ஆம், 1969-ம் ஆண்டு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எனினும், மெட்ராஸ் என்பதுதான் பலருக்கும் பரீட்சையமாக இருந்தது.

1996-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி, அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு, மெட்ராஸ் என்கிற பெயரை மாற்றி, சென்னை என்ற பெயரை அதிகாரப்பூர்வ பெயராக மாற்றியது. அதன்பிறகுதான், மெட்ராஸ் என்கிற சொல்லின் புழக்கம் குறையத் தொடங்கியது. என்றாலும், சென்னையின் பெருமையைக் கொண்டாடும் வகையிலும், பழைமையை நினைவுகூரும் வகையிலும் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி, ‘மெட்ராஸ் டே’ என்கிற தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் தினத்தின் போது, பல்வேறு நிகழ்ச்சிகளைத் தமிழக அரசு ஏற்பாடு செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், இந்த ஆண்டும் ‘மெட்ராஸ்’ தினத்தைக் கொண்டாடும் விதமாகப் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் வகையில் நடத்தத் திட்டமிட்டிருந்தது. சென்னையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மரக்கன்று நடுதல், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அமைத்தல், சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்னவோ மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், இந்தியாவிலிருந்து பல மாநிலங்களிலிருந்தும் வாழவந்தவர்கள் சென்னையை தங்கள் சொந்த இடமாகக் கருதுவதுண்டு. வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னையின் 382-வது பிறந்தநாளுக்கு உங்களுடைய பிளான் என்ன?

source https://tamil.indianexpress.com/lifestyle/madras-day-celebrations-chennai-history-tamilnadu-tamil-news-334696/