திங்கள், 30 ஆகஸ்ட், 2021

5 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்த நடவடிக்கை:

 தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று (ஆக.27) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய திருவையாறு தொகுதி திமுக உறுப்பினர் துரைசந்திரசேகர், ‘‘தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை கடந்து வருவதில் அவமானம் ஏற்படுகிறது. வாகனத்தில் எம்எல்ஏ இருக்கிறாரா, பாஸ் உள்ளதா என்பதை ஆய்வு செய்கின்றனர். நீண்ட நேரம் அனைவரையும் காக்க வைக்கின்றனர். எனவே, மத்திய அரசிடம் பேசி இந்த சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, “
சென்னைக்கு அருகிலுள்ள 5 சுங்கச்சாவடிகளைக் கடக்க அதிக நேரம் எடுக்கும் என்பது உண்மைதான், இவை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இயங்கி வரும் 48 சுங்கச்சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் சென்னையை சுற்றியுள்ள பரனூர், நெம்மேலி, சென்னசமுத்திரம், சூரப்பட்டு மற்றும் வானகரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் அவரை நேரில் சந்தித்து பேசவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த முயற்சிகளை அரசு செய்யும்‘‘ என்றார்.

OMR சாலையில் ஆக.30ஆம் தேதி முதல் சுங்கக் கட்டண வசூல் நிறுத்தம்:

தொடர்ந்து சில அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் எ.வ.வேலு, ஆகஸ்ட் 30 முதல் சென்னை ஓஎம்ஆர் (OMR) சாலையில் பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் ஆகிய சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்படும் என தெரிவித்தார். மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதை முன்னிட்டு சுங்கக் கட்டண வசூல் நிறுத்தம் செய்யப்படுதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-city-tamil-news-tn-govt-will-shutdown-5-tollgate-near-city-336605/