வியாழன், 26 ஆகஸ்ட், 2021

புதிதாக 6 மாநகராட்சிகள்; இணைக்கப்படும் பகுதிகள் எவை? அமைச்சர் நேரு அறிவிப்பு

 25 08 2021 

தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் உருவாக்கப்படுவதாக, அமைச்சர் கே.என்.நேரு செவ்வாய்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் துறைவாரியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்கிழமை அன்று நகராட்சி நிர்வாக துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அமைச்சர் கே.என்.நேரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தற்போதைய சூழலில் நகர்ப்புற மக்கள் தொகை 53 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கருதப்படுகிறது. இதனால் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் அருகே நகர்ப்புற தன்மையோடு உள்ள பகுதிகளை நகர்புறங்களோடு இணைத்து தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது இன்றியமையாததாகிறது.

தற்போது உள்ள நகர்புற பகுதிகளை சுற்றியுள்ள பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகை அடர்த்தி, நகர்ப்புற தன்மை, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில், நகர்புறமாக மாறி வரும் அந்த பகுதிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படுகிறது.

இதனையடுத்து தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதேபோல், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலுார், சிவகாசி ஆகிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஒசூர் மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து, புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கம் மற்றும் விரிவாக்கம் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டது. அறிக்கையின் படி,

புதிய மாநகராட்சிகள்

தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலுார், சிவகாசி ஆகிய ஆறு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதிய மாநகராட்சியாக தாம்பரம் மாநகராட்சி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேபோல், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலுார், சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதை சுற்றி உள்ள பேரூராட்சி அல்லது கிராம ஊராட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து, மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வகையில், தமிழகத்தில் புதிதாக ஆறு மாநகராட்சிகள் அமைகின்றன. ஏற்கனவே 15 மாநகராட்சிகள் இருந்த நிலையில், தற்போது மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்கிறது.

மாநகராட்சிகள் விரிவாக்கம்

திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய நான்கு மாநகராட்சிகள் அருகிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளை சேர்த்து விரிவாக்கம் செய்யப்படுகிறது.

புதிய நகராட்சிகள்

பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்துார், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோழிங்கர், இடங்கனசாலை, தாரமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலுார், காரமடை, கருத்தம்பட்டி, மதுக்கரை, வடலுார், கோட்டக்குப்பம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்துார், கொல்லன்கோடு, முசிறி, லால்குடி ஆகிய, 28 பேரூராட்சிகள், அதன் அருகேயுள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து, நகராட்சிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், புஞ்சை புகளூர் மற்றும் டி.என்.பி.எல்., புகளூர் ஆகிய இரண்டு பேரூராட்சிகளையும் இணைத்து, புகளூர் நகராட்சியாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சிகள் விரிவாக்கம்

செங்கல்பட்டு, பூந்தமல்லி, மன்னார்குடி  ஆகிய மூன்று நகராட்சிகள், அதை சுற்றியுள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தரம் உயர்த்தல் மற்றும் விரிவாக்கம் செய்யும்போது, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இணைக்கப்படும் ஊராட்சிகளில், ஏற்கனவே தேர்வான அல்லது தேர்வு செய்யப்படும் உள்ளாட்சி உறுப்பினர்கள், அவர்களின் பதவிக்காலம் முடியும் வரை அப்பதவிகளில் தொடர்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பதவிக்காலம் முடியும் போது, புதிதாக உருவாக்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் நகராட்சி அல்லது மாநகராட்சியின் முழுமையான ஆளுமைக்கு உட்படுத்தப்படும். என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/areas-to-be-connected-to-6-new-corporations-announcement-by-minister-nehru-335859/