ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி தாக்குதல் : அரியானாவில் பதற்றம்

 28 08 2021 

Tamil National News Update : அரியானா மாநிலத்தின் பஸ்தாரா சுங்கச்சாவடியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரியான முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் இன்று காலை கர்னல் பகுதியில் நகராட்சித் தேர்தலுக்கான பாஜக கூட்டம் நடைபெற இருந்தது. இந்த கூட்டத்திற்கு வருகை தரும் முதல்வர் மனோகர் லால் கட்டார்க்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கலைப்பதற்காக காவல்துறையினர் தடியடி நடத்தியதால் கர்னலில் பெரும் பதற்றம் நிலவியது. தொடர்ந்து பிற்பகலில், தொழிற்சங்கத் தலைவர்கள் தேசிய நெடுஞ்சாலையை மறித்து, பஸ்தாரா சுங்கச்சாவடி மற்றும் ஷாபாத்தில் (குருக்ஷேத்ரா) தேசிய நெடுஞ்சாலையில் மற்றொரு சுங்கச்சாவடி மற்றும்  கல்கா-ஜிராக்பூர் நெடுஞ்சாலையையும் (சூரஜ்பூர் சுங்கச்சாவடி) ​​முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போலீஸ் கமிஷனரேட் (பஞ்ச்குலா) ட்விட்டர் பதிவில், “சூரஜ்பூர் டோல் பிளாசா (கல்கா-ஜிரக்பூர் நெடுஞ்சாலை) போராட்டம் நடத்திய விவசாயிகள்  தாக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் இந்த வழியை அவசர பயன்பாட்டிற்கு தவிர  மற்ற நேரங்களில் பயன்படுத்த வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் போலீசார் நடத்திய தடியடி தாக்குதலில் பெரும்பாலான விவசாயிகள் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யு) தலைவர் குர்ணம் சிங் சாதுனி, “எனது சகோதரர்கள் அனைவரும் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள சுங்கச்சாவடிகளை உடனடியாக அணுகுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். சுங்கச்சாவடிகள் உங்கள் இருப்பிடத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தால், அருகிலுள்ள நெடுஞ்சாலைகளை முற்றுகையிடவும் என்று”கூறி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.

நகராட்சி தேர்தலுக்கான பாஜக கூட்டம் நடைபெற்ற கர்னலில் உள்ள பிரேம் பிளாசா ஹோட்டலுக்கு வெளியே முற்றுகையிட்ட விவசாயிகள்  பிஜேபி தலைவர்களுக்கு கருப்பு கொடி காட்டி, தங்கள் வாகனங்களை முன்னோக்கி செல்லவிடாமல் தடுக்க முயன்றனர். ஆனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு காரணமாக, விவசாயிகள் எந்த வாகனத்தையும் தடுக்க முடியவில்லை இதனால்  பாஜகவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

விவசாயிகள் மீதான இந்த தாக்குதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான புபிந்தர் சிங் ஹூடா உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவாகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து  புபிந்தர் சிங் ஹூடா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது காட்டுமிராண்டித்தனமானது. பாஜகவின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து குறைந்தது 15 கிலோமீட்டர் தொலைவில் விவசாயிகள் அமைதியாக போராட்டம் நடத்தினர். விவசாயிகள் மீதான இத்தகைய நடவடிக்கை இந்த மாநில அரசின் தவறான நோக்கத்தை தெளிவாக காட்டுகிறது.  இந்த முழு அத்தியாயத்தின் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யு) தலைவர் குர்ணம் சிங் சாதுனி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், அரசு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், சுங்கச்சாவடிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் காலவரையற்ற முற்றுகைப்போராட்டம்  நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.  இந்த நாடு கார்ப்பரேட்டுகளுக்கு விற்கப்படுவதை நாங்கள் தடுக்கிறோம் என்பது மட்டுமே எங்கள் தவறு. எங்கள் நிலத்தை விற்கும் உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது, நம் நாட்டை விற்கும் உரிமையை யார் கொடுத்தது? அது நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதற்கான நாங்கள் சாலைகளில் உயரை விடவும் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/tamil-national-haryana-police-lathi-charge-for-farmers-protest-336767/