ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

ஊரக வேலை உறுதி திட்டம்: 4 ஆண்டுகளில் ரூ.935கோடி முறைகேடு!

 MGNREGA

கடந்த நான்கு ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் (MGNREGA) பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.935 கோடி நிதி முறைகேடு நடந்துள்ளதாக ஊரக வளர்ச்சித் துறைகளின் (RDD) கீழ் உள்ள சமூக தணிக்கைப் பிரிவுகள் (SAU) கண்டறிந்துள்ளது. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் மேலாண்மை தகவல் அமைப்பு (எம்ஐஎஸ்) மூலம் இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்த தொகையில் சுமார் ரூ.12.5 கோடி மட்டுமே (1.34%) இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

தரவுகள் பொது தளத்தில் இருந்தாலும் “நெட்வொர்க் சிக்கல்” காரணமாக அதை அணுகுவது கடினம். 2017-18 முதல் 2020-21 நிதியாண்டிற்கான தரவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் அரசு வட்டராங்கள் மூலம் பெற்றது.

2017-18 ஆம் ஆண்டில் தரவுகளை பதிவேற்றத் தொடங்கியதிலிருந்து, கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2.65 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் குறைந்தபட்சம் ஒருமுறை தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2017-2018ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.55,659.93 கோடி நிதியை விடுவித்தது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்த தொகை அதிகரித்து 2020-2021 ஆம் ஆண்டில் ரூ.1,10,355.27 கோடியை எட்டியுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த செலவு 2017-2018ஆம் ஆண்டில் ரூ.63,649.48 கோடியாக இருந்தது. ஆனால் இது 2020-2021ஆம் ஆண்டில் ரூ.1,11,405.3 கோடியாக உயர்ந்துள்ளது.

தணிக்கையின்போது நிதி முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லஞ்சம், இல்லாத நபர்களுக்கு பணம் வழங்கல், அதிக விலைக்கு வாங்கப்பட்ட பொருட்களுக்காக விற்பனையாளர்களுக்கும் பணம் செலுத்துதல் போன்றவை அடங்கும்.

சமூகத் தணிக்கை என்பது செலவு செய்யப்பட்ட பணத்தை மட்டும் ஆய்வு செய்யாமல் அந்த திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பின் திறம், திட்ட செயலாக்க முறை திட்ட பயன் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான ஆய்வாகும்.

மத்திய ஊரக வளர்ச்சி செயலாளர் நாகேந்திரநாத் சின்ஹா ​​சமீபத்தில் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் மாநில ஊரக வளர்ச்சித்துறை முறைகேடு செய்யப்பட்ட பணத்தை குறைவாக மீட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அனைத்து மாநிலங்களுக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளோம். இந்த பிரச்சனையில் கவனக்குறைவு நடந்துள்ளது. முறைகேடுகளுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணுவற்கு இந்த வழக்குகளை கையாள SOPs இல்லாத நிலையில் தீர்மானிப்பது எளிதானது அல்ல என கூறினார். மீட்கப்பட்ட தொகையை உறுதிப்படுத்த போதுமான நபர்கள் பெரும்பாலும் இல்லை என சின்ஹா ​​கூறினார். இதனால் சமூக தணிக்கை முடிவுகளுக்கு தீர்வு காணுவதில் கவனகுறைவு ஏற்படுகிறது என கூறினார்.

தமிழகத்தில் தான் அதிக முறைகேடு நடந்துள்ளது. மாநிலம் முழுவதும் 12,525 கிராம பஞ்சாயத்துகளில் ரூ.245 கோடி முறைகேடு நடந்துள்ளது. அதற்காக 37,527 தணிக்கை அறிக்கைகள் பதிவேற்றப்பட்டன. மீட்கப்பட்ட தொகை ரூ. 2.07 கோடி ஆகும். இது முறைகேடு செய்யப்பட்ட தொகையில் 0.85% மட்டுமே. ஒரு ஊழியர் பணியிடை இடைநீக்கம் செய்யப்பட்டு இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு எஃப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.

ஆந்திராவில் 12,982 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. மேலும் 31,795 சமூக தணிக்கைகள் நடத்தப்பட்டு அறிக்கைகள் பதிவேற்றப்பட்டன. மொத்தமாக முறைகேடான நிதி ரூ.239.31 கோடி. இதில் மீட்கப்பட்டது ரூ. 4.48 கோடி (1.88%) மட்டுமே. ரூ.14.74 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 10,454 ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மொத்தம் 551 பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு 180 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மூன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது

கர்நாடகாவில் உள்ள 6,027 கிராம பஞ்சாயத்துகளில் ரூ.173.6 கோடி முறைகேடு நடந்துள்ளது. இதில் ரூ.1.48 கோடி (0.68 %) மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மொத்தம் 22,948 தணிக்கை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இது தொடர்பாக 2 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், கர்நாடகா ஒரு எஃப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை மற்றும் அதன் ஊழியர்கள் எவரையும் இடைநீக்கம் செய்யவில்லை.

பீகாரில் ரூ.12.34 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.1,593 மீட்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ரூ.2.45 கோடி முறைகேடு செய்யப்பட்டது. இதில் ரூ.14,802 மீட்கப்பட்டது.

குஜராத்தில் ரூ.6,749 மட்டுமே முறைகேடாக பயன்படுத்தப்பட்டது. அதில் எதுவும் மீட்கப்படவில்லை.

ஜார்க்கண்ட் அதிக எஃப்.ஐ.ஆர் -களை பதிவு செய்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட 38 எப்ஐஆரில் ஜார்க்கண்ட் மாநிலம் 14 தாக்கல் செய்துள்ளது. இரண்டு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 31 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனினும், முறைகேடாக பயன்படுத்தப்பட்ட ரூ.51.29 கோடியில் ரூ.1.39 கோடி (2.72%) மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், கேரளா, அருணாச்சலப் பிரதேசம், கோவா, லடாக், அந்தமான் மற்றும் நிக்கோபார், லட்சத்தீவு, புதுச்சேரி, மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டியூ போன்றவற்றில் நிதி முறைகேடாக பயன்படுத்தப்படவில்லை.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் பிரிவு 17 கிராம பஞ்சாயத்துகளில் அனைத்து வேலைகளையும் சமூக தணிக்கை செய்ய கட்டாயப்படுத்துகிறது. 2011 ஆம் ஆண்டு திட்ட விதிகளின் தணிக்கை மற்றும் 2016 ல் சமூக தணிக்கைக்கான தணிக்கை தரநிலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிராம மேலாண்மை அமைச்சகம் நிதி மேலாண்மை குறியீட்டை வெளியிட்டுள்ளது, இதில் நிதி நிர்வாகத்தில் மாநிலங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு சமூக தணிக்கை ஒரு முக்கிய அளவுருவாகும். 2011 ஆம் ஆண்டு விதிகள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஊரக வேலை உறுதி திட்டததின் கீழ் செய்யப்படும் சமூக தணிக்கையை மாநில அரசு எளிதாக்கும் என்று கூறுகிறது.

உண்மையான முறைகேடு கண்டுபிடிக்கப்பட்ட தொகையை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாக இருக்கலாம். பல கிராம பஞ்சாயத்துகளில், தணிக்கை ஒரு முறை மட்டுமே செய்யப்பட்டது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நிபுணர் ஒருவர் கூறுகையில், ” 2020-21 இல், பதிவேற்றப்பட்ட தரவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. ஜார்க்கண்ட் உட்பட பல மாநிலங்களில், ஒரே நேரத்தில் தணிக்கை செய்யப்பட்டது. ஆனால் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் மேலாண்மை தகவல் அமைப்பு தளத்தில் தரவை பதிவேற்றவில்லை. பல மாநிலங்களில் கிராம பஞ்சாயத்துகள் ஒருமுறை மட்டுமே கணக்கெடுக்கப்பட்டுள்ளன. மொத்தமாக தவறாகப் பயன்படுத்தப்பட்ட தொகை கண்டுபிடிக்கப்பட்டதைவிட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக இருக்கலாம்” என்றார்.

சமூக தணிக்கைப் பிரிவு சுதந்திரமாக செயல்படுவது முக்கியமான ஒன்று. ஜூன் 2020 இல் சமூக தணிக்கை மதிப்பீட்டு அட்டவணை அறிக்கையை வெளியிட்ட RDD செயலாளர் சின்ஹா ​​கூறியதாவது: “சமூக தணிக்கைப் பிரிவுகளில் பாதி சுதந்திரமாக செயல்பட முடிவதில்லை. தணிக்கைகளின் தரம் மற்றும் கண்டுபிடிப்புகளின் மீதான நடவடிக்கையின் தீவிரம் மேம்படுத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டார்.

source https://tamil.indianexpress.com/india/mahatma-gandhi-rural-employment-guarantee-scheme-rs-935-crore-misappropriation-in-4-years-334513/