27 08 2021
Kodanad Case Update : தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயல்லிதாவுக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதி இந்த பங்களாவிற்குள் புகுந்த சில மர்மநபர்கள் காவலாளியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து பல பொருட்களை கொள்ளையடித்துச்சென்றுவிட்டனர். இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சயான் மற்றும் கனகராஜ் என்ற இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 8 பேர் ஜாமீனிலும், சயான் மற்றும் கனகராஜ் இருவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், காவல்துறையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக மறுவிசாணையை தொடங்கியுள்ளனர். இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது மேல் விசாரணை நடத்தக்கூடாது என்று அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் சாட்சியான கோவையைச் சேர்ந்த ரவி என்பவர், கொடநாடு வழக்கில் மேல் விசாரணை செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இன்று நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையில், ஒரு குற்றவழக்கில் தொடர்புடையுவர்களை முழுமையாக கண்டறிந்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தவே காவல் துறை சார்பில் விசாரணையை விரிவுபடுத்துவதற்கு மனுத்தாக்கல் செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கின் விரிவான விசாரணை முடிந்தவுடன், அதன் அறிக்கை நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இந்த விவாதங்களை கேட்டறிந்த நீதிபதி, ‘ஒரு வழக்கில் எந்த நேரத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும் என்று கூறி காவல் துறை விசாரிக்க எந்தவொரு தடையும் இல்லை என்றும், விசாரணை அறிக்கை தாக்கல் செய்தவுடன் அது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும்’ என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
source : https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-kodanad-investigation-update-in-tamil-update-336521/