சனி, 28 ஆகஸ்ட், 2021

மறுவாழ்வு முகாம்களாக மாறுகிறது இலங்கை அகதிகள் முகாம்

 

28/08/2021 இலங்கை தமிழர் அகதிகள் முகாம் இன்று முதல் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை, கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் பூண்டி கலைவாணன், அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் நேற்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதை பாராட்டி பேசினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உறுப்பினர் பேசியது போலவே தானும் நேற்றைய தினம் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்றே குறிப்பிட்டதாகவும், இன்று முதல் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பது இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் எனவும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இலங்கைத் தமிழர்கள் அனாதைகள் அல்ல எனவும் அவர்களுக்காக நாங்கள் இருக்கிறோம் எனவும் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கைத் தமிழர்கள் நலனில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

source https://news7tamil.live/sri-lankan-refugee-camp-turns-into-rehabilitation-camps.html