தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 31 08 2021
தமிழ் வளர்ச்சித்துறையில் 20 புதிய அறிவிப்புகளை சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டார். அதன்படி, தமிழறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பிறந்த நாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்த 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றும், கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும் எனக்கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, 2 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தார். மேலும், பள்ளி மாணவர்களின் இலக்கிய திறனறி தேர்வு நடத்தி ஆண்டுதோறும் ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்படுவர் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழந்தமிழ் மற்றும் நவீன இலக்கியங்களை ஒளி நூல்களாக வெளியிட 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்றும், அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
source https://news7tamil.live/texts-of-tamil-writers-will-be-nationalized-minister-information.html