வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

மைசூரு தமிழ் கல்வெட்டுகள் சென்னைக்கு மாற்றம்: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

 20 08 2021 

மைசூரு மையத்தில் உள்ள தமிழ் கல்வெட்டுப் படிகளை தமிழகத்திற்கு மாற்றி அவற்றை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி, பாதுகாக்க அரசுக்கு உத்தர விட வேண்டும் என கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ​​

பெரும்பாலான கல்வெட்டு படிகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழில் இருப்பதாகவும் ஆனால் அவை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி என் கிருபாகரன் மற்றும் நீதிபதி எம் துரைசாமி அடங்கிய டிவிஷன் பெஞ்ச், சென்னையில் உள்ள தொல்லியல்துறையின் கல்வெட்டியல் கிளையை தமிழ் கல்வெட்டியல் துறை என பெயர்மாற்றம் செய்ய உத்தரவிட்டது. மேலும் ஒவ்வொரு மொழிக்கும் உள்ள கல்வெட்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்வெட்டு ஆய்வாளர்களை மத்திய தொல்லியல் துறை நியமிக்கவும் உத்தரவிட்டனர்.

மைசூரு மையத்தில் உள்ள தமிழ் கல்வெட்டுப் படிகளின் ஆவணங்களை, ஆறு மாதங்களுக்குள் சென்னை மத்திய தொல்லியல்துறை அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும். சமஸ்கிருதம் உட்பட சில மொழிகளுக்கு உள்ளது போல், சென்னையில் தமிழ் கல்வெட்டு ஆய்வுப் பிரிவு தனியாக துவக்க வேண்டும். இதற்காக தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கவும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், மைசூருவில் உள்ள அனைத்து கல்வெட்டு படிகளும் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு, பூச்சி கட்டுப்பாடு நடவடிக்கைகள் வாரந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/court-ordered-to-transfer-estampages-of-tamil-inscriptions-from-mysore-to-chennai-334176/