புதன், 25 ஆகஸ்ட், 2021

சட்டமன்ற ஹைலைட்ஸ் 24 08 2021

 Assembly highlights, ops praises duraimurugan, duraimurugan golden year in assembly, congress criticise aiadmk, kodanadu case, congress, சட்டமன்ற ஹைலைட்ஸ், அதிமுகவை சீண்டிய காங்கிரஸ், துரைமுருகனை புகழ்ந்த ஓபிஎஸ், துரைமுருகன் , சட்டப்பேரவையில் 50 ஆண்டு, tamil nadu assembly, aiadmk, ops, dmk, mk stalin

தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை கடந்த 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்ட சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதங்கள் கடந்த 19ம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. அதன்பிற்கு, சட்டப்பேரவைக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை ஆகஸ்ட் 23 காலை 10 மணிக்கு மீண்டும் கூடியது. இன்றைய கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சட்டப்பேரவையில் பொன்விழா நாள் என்பதால், அவருடைய 50 ஆண்டு கால சட்டமன்றப் பணியை பாராட்டி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

துரைமுருகனின் 50 ஆண்டு சட்டமன்றப் பணியைப் பாராட்டிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ““பொது நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை மீதான அறிக்கை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று தொடங்குகிறது. அதில் முதல் முறையாக நீர்வளத்துறையில் தீர்மானம் கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

திமுக பொதுச்செயலாளரும், அவை முன்னவராகவும் இருக்கக் கூடிய துரைமுருகனின் இலாகாவைச் சேர்ந்த மானியக் கோரிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நூற்றாண்டு பெருமைமிக்க இந்த அவைக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே வந்த பெருமைக்குரியவர் துரைமுருகன். கடந்த 50 ஆண்டுகளாக அவை நடவடிக்கைகளில் பங்கெடுத்தவர்.

அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு சட்டமன்றத்தை அலங்கரித்தவர்களில் முக்கிய மற்றும் மூத்த உறுப்பினராவார். ஆகையாலேயே அவையின் முன்னவராக வீற்றிருக்கிறார். தலைவர் கலைஞர் மற்றும் பேராசிரியர் மறைவுக்கு பிறகு மாபெரும் அரசியல் இயக்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்துக்கொண்டு எனக்கு வழிகாட்டியாக இருந்துக்கொண்டிருக்கிறார்.

என்னை இளைஞராக பார்த்ததாக அவர் அடிக்கடி கூறுவதுண்டு. ஆனால் நான் அவரை கலைஞரிடத்திலும் பேராசிரியர் இடத்திலும் வைத்து பார்க்கிறேன். மனதில் பட்டதை அப்படியே எடுத்துச் சொல்லி ஆட்சிக்கும் கட்சிக்கும் உறுதுணையாக இருக்கக் கூடியவர்.

தலைவரும் கலைஞர் அமைச்சரும் துரைமுருகனும் நேரம் கடப்பதே தெரியாத அளவுக்கு பேசிக்கொண்டிருப்பார்கள். அதனை கண்டு எங்களுக்கே பொறாமையாக இருக்கும். “ஒருதாய் வயிற்றில் பிறக்க வயிறு தாங்காது என்பதால் தனித்தனி தாய் வயிற்றில் பிறந்தவர்கள் நாம்” என பேரறிஞர் அண்ணாவின் சொற்றொடருக்கு எடுத்துக்காட்டுதான் தலைவர் கலைஞர் – துரைமுருகன் உறவு.

முத்தமிழறிஞர் கலைஞருக்கு அருகே அல்ல, அவரது இதயத்திலேயே ஆசனம் போட்டு அமர்ந்திருப்பவர் துரைமுருகன். அந்த இடம் எல்லோருக்கும் கிடைத்திடாது. எந்தத் துறையில் எந்த பதவியில் வகித்தாலும் அதில் தனது முத்திரையை பதிப்பார் அமைச்சர் துரைமுருகன். இதைவிட பெரிய திறமை ஒன்று அவரிடம் உள்ளது. இந்த கூட்டத்தை அழ வைக்க நினைத்தால் அழ வைக்கவும், சிரிக்க வைக்க நினைத்தால் சிரிக்க வைக்கவும், உணர்ச்சி வசப்படுத்தவும் அவரால் மட்டுமே முடியும்.

இவ்வாறு மிகப்பெரிய ஆற்றல் பெற்றவர் திமுக அரசின் அமைச்சராக இருப்பது அரசுக்கும் கழகத்துக்குமே பெருமை. அவை முன்னவாரக அவரை பெற்றிருப்பது சட்டப்பேரவைக்கே பெருமை. சட்டமன்றத்தில் 50 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து பொன்விழா நாயகனாக உருவெடுத்திருக்கிறார்.

அத்தகைய பொன்விழா நாயகனை பாராட்டும் வகையில் தீர்மானத்தை முன்மொழிகிறேன். இதனை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவையின் மாண்பை காப்பதில் நல்ல வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை இந்த சட்டப்பேரவை மனதார பாராட்டுகிறது என்ற தீர்மானத்தை முன்வைக்கிறேன். ஆருயிர் அண்ணன் அமைச்சர் துரைமுருகனை மனதார வாழ்த்துகிறேன்.” என்று கூறினார்.

அமைச்சர் துரைமுருகனை பாராட்டி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிரக்கட்சி துணை தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: “2001-ம் ஆண்டில் இருந்து அவரது அவை நடவடிக்கைகளை நான் கவனித்து வருகிறேன். உயர்ந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர் துரைமுருகன். கருணாநிதியின் அளவில்லாப் பாசத்தையும் அன்பையும் பெற்றவர். அவர் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். அனைவரது உள்ளங்களையும் கவர்ந்த துரைமுருகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருக்கிறார். சூடாகப் பேசும் துரைமுருகன், அடுத்த நொடியே இனிமையாகப் பேசுவார்” என்று புகழ்ந்து பேசினார்.

தீர்மானம் மீது ஏற்புரை ஆற்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: “என் வாழ்க்கையில் எத்தனையோ வெற்றி, தோல்விகளை கண்டிருக்கிறேன். ஆனால், இந்த அவையில் என் தலைவர் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நான் எதிர்பார்க்கவில்லை. பாரபட்சமின்றி அனைத்து தலைவர்களும் பேசியதை கேட்டு நெஞ்சம் நெகிழ்கிறது.

ஒரு நண்பனை போல் என்னை பார்த்துகொண்டவர் கலைஞர். அவரது மறைவுக்கு பிறகு வெற்றிடம் இருக்குமே என்ற எண்ணம் இருந்தது. ஆனால், கலைஞரையே விஞ்சும் அளவிற்கு ஸ்டாலினின் செயலும், என் மீதான பாசமும் உள்ளது.

இந்த அவையில் உள்ள தலைவர் பெருமக்கள் எந்த அளவிற்கு என்னை பாராட்டினார்களோ உங்கள் அன்பிற்கேற்றார்போல் வாழ்ந்து காட்டுவேன்.

என் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு நான் வாழ்ந்து காட்டுவேன் என்று உணர்ச்சி வசப்பட்டு அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் மல்க பேசினார்.

இதைத்தொடர்ந்து, கோடநாடு வழக்கு குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பதற்காக விதி எண் 55ன்கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதாக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை கூடுவதற்கு முன்னதாக அ.தி.மு.க அமைச்சர் டி.ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரக் கூடாது என்று கூறினார். காங்கிரஸ் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான வழக்குகளையும் விவாதிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுகவினரின் எதிர்ப்புக்கு விளக்கம் அளித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “நாங்கள் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கிறோம் என்றால் தைரியம் இருந்தால் சட்டப்பேரவைக்கு வந்து பதில் சொல்லட்டும். இது தொடர்பாக நாங்களும் விவாதிக்கத் தயார் எனக் கூற வேண்டியதுதானே. அதை விடுத்து காலை நேரத்திலேயே செய்தியாளர்களை ஏன் சந்திக்க வேண்டும். கோடநாடு விவகாரம் தொடர்பாக பேரவையில் நாங்கள் முயற்சி செய்வதை அதிமுக தொண்டர்களும் வரவேற்கின்றனர். ஆனால், இவர்கள் ஏன் அச்சப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை. சட்டப்பேரவையில் அதிமுகவினர் விவாதிக்கத் தயாராக இல்லையென்றால் மக்கள் மன்றத்தில் நாங்கள் விவாதிப்போம். இந்த ஆட்சி ஜெயலலிதாவுக்கு நீதியினை வழங்கும். கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் விபத்தில் மரணமடைந்துள்ளார்கள். ராஜேஷ்குமார் நாவல் போன்று பல்வேறு மர்மங்கள் இதில் உள்ளது.

கொடநாடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தினேஷ்குமார் தற்கொலை செய்து கொள்கிறார். அவர் தற்கொலை செய்து கொண்ட லுங்கி அவருடையது இல்லை என தினேஷ்குமார் தங்கையே தெரிவித்துள்ளார். இவ்வாறு அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளது.” என்று கூறினார்.

இப்படி, ஆகஸ் 23ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தில், துரைமுருகனின் 50 ஆண்டு சட்டமன்றப் பணிகளைப் பாராட்டி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது, ஓபிஎஸ் புகழ்ந்து பேசினார். கோடநாடு விவகாரத்தில் காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு கடிதம் அளித்து அதிமுகவை சீண்டியது. துரைமுருகன் கண்ணீர் மல்க அவைக்கு நன்றி தெரிவித்து பேசியதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே போல, கோடநாடு கொலை கொள்ளை விவகாரம் தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கட்சி மனு அளித்துள்ளதும் அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் இன்றைய சட்டப்பேரவையை பரபரப்பாக்கியது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/assembly-today-highlights-ops-praises-duraimurugan-congress-criticise-aiadmk-335226/