புதன், 25 ஆகஸ்ட், 2021

கே.டி.ராகவனை உடனே கைது செய்ய வேண்டும் – காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி டிஜிபியிடம் புகார்

 24 08 2021 

Jothimani MP lodged complaint against KT Ragavan, பாஜக, கேடி ராகவனை உடனே கைது செய்ய வேண்டும், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி டிஜிபியிடம் புகார், congress mp jothimani, dgp, congress, bjp, kt ragavan sex scandal

பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் தொடர்பாக பாலியல் வீடியோ தமிழக அரசியலில் சர்ச்சை புயலாக வீசியுள்ள நிலையில், கே.டி.ராகவனை கைது செய்யக் வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.

பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் இடம்பெற்றுள்ளதாக ஒரு பாலியல் வீடியோ யூடியூபர் மதன் என்பவரால் வெளியிடப்பட்டு சமூக ஊடகங்களில் பரவி தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கே.டி.ராகவனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

பாலியல் வீடியோ வெளியாகி சர்ச்சையானதைத் தொடர்ந்து, கே.டி.ராகவன் பாஜக மாநில பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கே.டி.ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்…எனனை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்…நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்..இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்.

என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்” என்று விளக்கம் அளித்திருந்தார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், “பாரம்பரியத்தையும், மரபையும் கட்டிக்காக்கும் பாஜகவில் பொறுப்பிலும், நிர்வாகத்திலும் இருக்கும் பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள். மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். ஒரு விசாரணைக் குழு அமைத்து சாட்டப்படும் குற்றங்களில் வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதி எம்.பி ஜோதிமணி கே.டி. ராகவனை கைது செய்யக் கோரி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், “இந்திய அளவில் குறிப்பாக தமிழகத்தில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், கடந்த அதிமுக அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. இதேபோல் பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். நீதியின் முன் தண்டனை பெற்றுத்தர வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் தலைநிமிர்ந்து நடக்க முடியும். இவர்களை இந்த அரசு உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் என்ற உத்தரவாதத்தை, நம்பிகையை தமிழக அரசு அளிக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி டிஜிபியிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: “பாஜக மாநில பொதுச் செயலாளர் கே டி ராகவன் என்பவரின் பாலியல் அத்துமிறல் தொடர்பான ஆபாச வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது. இந்திய அளவில் குறிப்பாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு பாஜகவின் விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன் மீது அதே கட்சியைச் சேர்ந்த மகளிர் அணி பொதுச் செயலாளர் காயத்ரி, கலிவரதன் தன்னை தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்ததாகவும் ஏமாற்றி பணம் பரித்ததாகவும் காவல்துறையிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக, அவர்கள் இருவரும் பேசும் ஆடியோவும் வெளியானது. அதில் பாதிக்கப்பட்ட காயத்ரியின் துயரை, கண்ணீரை தமிழகமே கேட்டது.

அதே போல, பாஜகவின் மாணவர் அமைப்பான அகில இந்திய வித்யா பரிஷத்தின் தலைவர் சண்முகம் சுப்பையா அடுக்குமாடி குடியிருப்பில் தனிஅயக வசித்து வந்த ஒரு பெண்ணிடம் ஆபாசமாகவும் பாலியல் வக்கிரத்துடனும் நடந்துகொண்ட வீடியொ தமிழகத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்பொழுது தன்னை கடவுள் பக்தர், தனது கட்சியே கடவுளை காப்பாற்ற வண்டஹ் கட்சி என்று பொய் பேசி ஏமாற்றி வந்த பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் பூசை அறை அருகில் நின்று கொண்டு ஒரு பெண்ணிடம் தகாத வகையில் ஆபாசமாக பாலியல் வக்கிரத்துடன் நடந்து கொண்டுள்ளார்.

ஆனால், பாஜக தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கடும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் தங்கள் தலைவர்களை தொடர்ந்து காப்பற்றி வருவது மட்டுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை ஊக்குவித்தும் வருகிறது. கலிவரதன் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வேட்பாளரானார். சண்முகம் சுப்பையா தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீரி மதுரையில் இன்னும் துவங்கப்படாத எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி அரசால் நியமிக்கப்பட்டார்.

அன்று ஆட்சியில் இருந்த அதிமுக, பாஜகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகப் பெண்களின் பாதுகாப்பிற்கும் கண்ணியத்திற்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில், இந்த குற்றச்சாட்டுகள் மீது நடவடிககி எடுக்காமல் அதிமுக அரசு மூடி மறைத்துவிட்டது.

பாஜக தலைவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் எடப்பாடி பழனிசாமி அரசால் மிரட்டப்பட்டார்கள். பாலியல் புகார்களை திரும்பப் பெறுமாறு அழுத்தம் தரப்பட்டது. அதனால், பாதிக்கப்பட்ட பெண்கள் அதிமுக பாஜக அரசுகளின் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் அராஜகத்திற்கும் மிரட்டலுக்கும் பயந்து புகார்களை திரும்ப பெற்ற அவலமும் நடந்தேறியது.

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் அதிமுக தலைவர்களால் கொடுமையான பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சீரழிக்கப்பட்டனர். இந்த வழக்கு ஒன்றிய பாஜக அரசின் கீழ் இயங்கும் சிபிஐக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் இன்று வரை எவ்வித தீவிரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பெயரளவிற்கு அதிமுக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அன்றைய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நெருக்கமானவர்கள் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய தலைவர்களுக்கு இந்த கொடுமையான பாலியல் வல்லுறவு வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகம் பரவலாக மக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், உண்மையான குற்றவாளிகள் அதிகார பலத்தோடு இன்னும் வெளியில்தான் இருக்கிறார்கள்.

அதிமுகவின் பாலியல் குற்றங்களை பாஜகவும் பாஜகவின் பாலியல் குற்றங்களை அதிமுகவும் தொடர்ந்து மூடி மறைத்து வருகிறது. தொடர்ந்து தமிழ்நாட்டு, சகோதரிகள் இந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த கொடும் பாலியல் குற்றவாளிகளால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். தங்களது மானத்திற்கும் குடும்பத்தினரின் உயிருக்கும் பயந்து பல சகோதரிகள் உண்மையை வெளியில் சொல்ல முடியாமல் புழுங்கி வேதனைப்பட்டு வருகிறார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியில் காவல்துறையின் மிக உயரிய பொறுப்பில் இருப்பவர்களே சட்டத்தை மீறி பாதிக்கப்பட்டு புகார் அளித்த பெண்களின்பெயரை வெளியே சொன்ன அவலமும் நிகழ்ந்தது. இது மற்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேரடியாக விடப்பட்ட எச்சரிக்கையில்லாமல் வேறென்ன?

காஷ்மீரில் எட்டு வயது சிறுமியை கோவில் கருவறைக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு கொலை செய்த கொடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் போன அவலத்தையும் இந்த நாடு பார்த்தது.

உத்தரப் பிரதேசத்தில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் ஒரு சிறு பெண்ணை பல ஆண்டுகளாக கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து பாதிக்கப்பட்ட குடும்பம் புகார் அளித்ததும், அந்தப் பெண்ணின் முதுகெலும்பை முறித்து அந்த குடும்பத்தையே கொலை செய்ததை மத்திய மாநில பாஜக அரசுகள் வேடிக்கை பார்த்ததைப் பார்த்து இந்த தேசமே அதிர்ச்சியில் உறைந்தது.

இதுபோல பல பாஜகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் சமூகத்திற்கும் பெண்களுக்கும் கடும் அச்சுறுத்தலாக வெளியில் உலவிக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் இந்த அவலம் நடக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

பாஜகவின் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் உள்ளிட்ட பாஜக அதிமுகவைச் சேந்த பாலியல் குற்றவாளிகளை இந்த அரசு உடனடியாக விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும்.

நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டில் பெண்களாகிய நாங்கள் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் தலைநிமிர்த்து நடக்க முடியும்.

கடந்த ஆட்சியில் மூடி மறைக்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வண்புணர்வு குற்றங்கள் உள்ளிட்ட, கொடுமையான பாலியல் வண்புணர்வு குற்றஞ்க்களையும் அதிமுக, பாஜக அரசுகளால் பாதுகாக்கப்பட்ட பாலியல் குற்றவாளிகளையும் இந்த அரசு உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் என்கிற உத்திரவாதத்தை நம்பிக்கையை இந்த அரசு தமிழக மக்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறோம்” என்று ஜோதிமணி எம்.பி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/jothimani-mp-lodged-complaint-against-bjp-kt-ragavan-335561/