நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போஸ்டரில் ஜவஹர்லால் நேருவை தவிர்த்ததற்காக எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சந்தித்த இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR) இந்த பிரச்சனை சர்ச்சை தேவையற்றது என்று கூறியுள்ளது. வரும் நாட்களில் வெளியிடப்படும் மற்ற போஸ்டர்களில் நேரு படம் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளது.
“இந்த இயக்கத்தில் யாருடைய பங்கையும் குறைத்து மதிப்பிடுவதற்கு நாங்கள் முயற்சிக்கவில்லை” என்று ஒரு இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த பிரச்சினையில் விமர்சனத்தை நிராகரித்த அவர், ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட போஸ்டரில் இதுவும் ஒன்றாகும் என்று கூறினார்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் முதல் டிஜிட்டல் போஸ்டரில் ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்தை தவிர்த்ததற்காக இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில்லை காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை கண்டித்தார்.
இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் (ICHR) உறுப்பினர் செயலாளர் வெறுப்பு மற்றும் தவறான எண்ணங்களுக்கு தலைவணங்குவதாக குற்றம் சாட்டினார். மேலும், அவர், மோட்டார் கார் கண்டுபிடித்ததைக் கொண்டாடும் போது ஹென்றி ஃபோர்டை தவிர்ப்பாரா அல்லது விமானப் பயணத்தைக் கொண்டாடும் போது ரைட் சகோதரர்களை புறக்கணிக்க முடியுமா என்று கேட்டார்.
மோட்டார் காரை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஹென்றி ஃபோர்டு . உலகின் முதல் விமானத்தை உருவாக்கி பறக்க விட்டவர்கள் ரைட் சகோதரர்கள் ஆவர்.
“சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் முதல் டிஜிட்டல் போஸ்டரில் ஜவஹர்லால் நேருவை நீக்கியதற்கு இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் உறுப்பினர் – செயலாளர் அளித்துள்ள் விளக்கம் நகைப்புக்குரியது” என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறினார்.
மேலும், “தப்பெண்ணம் மற்றும் வெறுப்புக்கு அடிபணிந்த பிறகு, உறுப்பினர் – செயலாளர் வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லது” என்று அவர் கூறினார்.
“அவர் மோட்டார் கார் கண்டுபிடிப்பைக் கொண்டாடினால், அவர் ஹென்றி ஃபோர்டைத் தவிர்ப்பாரா? அவர் விமானப் பயணத்தின் பிறந்த நாளைக் கொண்டாடினால், அவர் ரைட் சகோதரர்களைத் தவிர்ப்பாரா? அவர் இந்திய அறிவியலைக் கொண்டாடினால், அவர் சர் சி.வி. ராமனைத் தவிர்ப்பாரா?” என்று சிதம்பரம் தொடர்ச்சியான ட்வீட்களில் கேள்வி எழுப்பினார்.
இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் ‘ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்’ கொண்டாட்டத்தின் போஸ்டரில் இருந்து நேருவின் உருவப்படம் விலக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் அதற்காக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து இது அல்பமான கொடுமை” என்று கூறினர்.
source https://tamil.indianexpress.com/india/p-chidambaram-criticise-on-ichr-for-omitting-jawaharlal-nehru-in-poster-indipendence-336975/