சனி, 28 ஆகஸ்ட், 2021

அடுத்தடுத்து வெளியான ஆடியோ,வீடியோ

 27 08 2021 கடந்த செவ்வாய்க்கிழமை பா.ஜ.கவின் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை மதன் ரவிச்சந்திரன் என்ற யூடியூபர் தனது ‘மதன் டைரி’ என்ற சேனலில் வெளியிட்டார். கே.டி.ராகவன் பாஜக பெண் நிர்வாகியிடம் செல்போன் வீடியோ காலில் ஆபாசமாக பேசிய வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கேடி ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழக பா.ஜ.கவின் தலைவர் கே. அண்ணாமலையின் ஒப்புதலுடன்தான் கே.டி. ராகவன் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோவை, தான் வெளியிட்டதாக யூ டியூபர் மதன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை மதன் ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் வெண்பா என்ற பெண் பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாஜக மேலிடம் அறிக்கை வெளியிட்டது. பாஜக கொள்கைகளின் நலனுக்கு எதிராக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் வீடியோ வெளியிட்டதில் மதனுக்கு உள்நோக்கம் இருக்குமோ என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வாயிலாக சந்தேகம் எழுப்பி இருந்தார். அண்ணாமலை தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக மதன் ரவிச்சந்திரன் குற்றம்சாட்டினார்.மேலும் வியாழக்கிழமை மற்றொரு வீடியோவை வெளியிட்டார்.

“மதன் டைரியில்” வெளியிடப்பட்ட வீடியோவில், ராகவன் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி மாநில கட்சித் தலைவருக்குத் தெரியும் என்பதை நிரூபிக்கும் வகையில் ரவிச்சந்திரன் அண்ணாமலையுடன் பேசியதை ரகசியாக பதிவு செய்துள்ளதாக தெரிகிறிது. வீடியோவை வெளியிடுவது, ரவிச்சந்திரனை டெல்லிக்கு அழைத்துச் சென்று தலைவர்களுக்கு விளக்கமளிப்பது போன்ற பேச்சுகள் அடிபடுகிறது. ஆனால் நடவடிக்கை எடுக்க நேரம் எடுக்கும் என்கிறார் அண்ணாமலை. மாநில பிரிவின் மூத்த தலைவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை அறிந்திருந்ததாகவும், ஆனால் மாநில கட்சித் தலைவராக தனக்கு வரம்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்.

ஆடியோக்கள் வெளியான பிறகு, அண்ணாமலை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அவரை தொடர்பு கொண்டபோதும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

முதல் வீடியோ வெளியான பிறகு, அண்ணாமலை கூறுகையில், இரண்டு முறை ரவிச்சந்திரன் தன்னை அணுகியதாகவும் அவரிடம் கட்சித் தலைவராக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் “வீடியோவை சரிபார்த்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விளக்கம் கேட்பதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க முடியாது” என கூறியதாக தெரிவித்தார்.

அண்ணாமலை மற்றும் மதன் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அவசர அவசரமாக கட்சியில் சேர்க்கப்பட்டனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, அண்ணாமலை ஆகஸ்ட் 2020 ல் பாஜகவில் இணைந்தார். பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி எல் சந்தோஷுடன் நெருக்கமாக இருந்தவர். அவர் கட்சியில் சேர்ந்த 11 மாதங்களுக்குப் பிறகு, ஜூலை 2021 ல் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

யூடியூபரும் பத்திரிகையாளருமான மதன் ரவிச்சந்திரன் அக்டோபர் 2020 ல் பாஜகவில் சேர்ந்தார். இது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக கருதப்படுகிறது. பல தமிழ் செய்தி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் பணியாற்றியுள்ள ரவிச்சந்திரன் மதன் டைரி மூலம் மிகவும் பிரபலமானவர். தனக்கென ஒரு தனி பாணியில் பணியாற்றியவர். சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களை எதிர்கொள்ள ரவிச்சந்திரன் பாஜகவுக்கு மிகவும் முக்கியமானவராக கருதப்பட்டார்.

சமீபத்திய சர்ச்சை தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத கட்சி தலைவர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் சில தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

சில ஆண்டுகளாக பிராமண சமுதாயத்தை சேர்ந்த மூத்த தலைவர்கள், ஆர்எஸ்எஸ் ஆதரவு தலைவர்கள், பிராமணர் அல்லாத தலைவர்கள் இடையே கட்சிக்குள்ளேயே பூசல் உள்ளது என கட்சி ஒரு தலைவர் கூறினார். பிராமணரல்லாத தலைவர்கள், முதலில் கட்சி மாநிலத் தலைவராகவும் இப்போது மத்திய அமைச்சராகவும், அண்ணாமலை கட்சித் தலைவராகவும் என பிராமணரல்லாத தலைவர்களை விரைவாக உயர்த்தியிருப்பது பலரை ஒதுக்கியிருக்கலாம் என்றார்.

தேசிய பதவிகளை வகித்த பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “அண்ணாமலை முதல் வீடியோ வெளியான பிறகு நிலைமையை சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும். ரவிச்சந்திரன் நீக்கப்பட்டாலும் ஆரம்பத்தில் அண்ணாமலை இந்தப் பிரச்சினையை கையாண்ட விதம் ஒரு கட்சி மாநிலத் தலைவருக்கு ஏற்புடையதல்ல. அண்ணாமலை வெளிப்படையாக பேசியதோடு ஆதாரங்களை வெளியிடவும் பரிந்துரைத்துள்ளார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

இருப்பினும், மற்ற தலைவர்கள் கூறுகையில்,” இந்த விவகாரம் கட்சியை பாதிக்காது. இந்த மிகப்பெரிய அவமானத்தை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அண்ணாமலை ராஜினாமா செய்ய இது ஒரு காரணம் அல்ல ”என்றார்.

மதன் ரவிச்சந்திரனின் செயல் குறித்து பேசிய மூத்த பாஜக தலைவர் ஒருவர், மதன் பாஜகவின் உறுப்பினர் என்கிற அடிப்படையில் அண்ணாமலை அவரிடம் இயல்பாக பேசியிருக்கலாம். ஆனால் மதன் செய்ததது நம்பிக்கையை சீர்குலைக்கும் செயல் என்றார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-bjp-kt-ragavan-sexual-misconduct-annamalai-youtuber-ravichandran-336361/