சனி, 28 ஆகஸ்ட், 2021

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

 28 08 2021 

மத்திய அரசின் புதிய மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் காரசாரா விவாதத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிக( ஊக்குவிப்பு மற்றும் உதவுதல் சட்டம்) 2020, விவசாயிகள் விலை உறுதி மற்றும் சேவைகள் ஒப்பந்தம் சட்டம் 2020, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்கள் கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த சட்டங்களை எதிர்த்து தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானங்களை கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், “இத்தகையை சூழலை கொண்டுவந்தது ஒன்றிய அரசுதான். வேளாண்மையை அழிக்க இருப்பதாக வேளாண் மக்கள் சொல்லி வருகிறார்கள். போராட்டமும் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் தொடர்ந்து வருகிறது. மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த சட்டம் கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது. விவசாயிகளின் வாழ்வு செழிக்க 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்ய வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனக் கேட்டுக்கொண்டார்.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் இந்த சட்டம் இருக்கிறது. விவசாயிகளின் வேதனைகளை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கும் அரசுக்கு முழு ஆதரவை தருகிறோம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆகிய கட்சிகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளார். அவருடன் கட்சியின் இதர 2 எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

விவசாயிகள் மத்தியில் வேளாண் சட்டம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என பாமக சட்டமன்ற குழு தலைவர் கோ.க.மணி ஆதரவு தெரிவித்துள்ளார். அதேபோல “போராடும் விவசாயிகளுக்கு நான் இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தும் வகையில் முதல்வர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்” என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், “விவசாயிகள் சுதந்திரமான முறையில் அதிக விலைக்கு விற்று லாபம் பெறுகின்றனர். அவசரக்காலமாக தனித்தீர்மானம் கொண்டு வராமல், அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து மத்திய அரசிடம் வலியுறுத்தலாம். அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்க வேண்டும்.” என அதிமுக எம்.எல்.ஏ கேபி.அன்பழகன் கூறியுள்ளார்.

சட்டங்களில் உள்ள பாதகங்களை மத்திய அரசிடம் எடுத்துச் சென்று உண்மைத்தன்மையை விளக்கி கூறி நமக்கு சாதகமான பதில் கிடைக்குமானால் திருத்தத்தை கொண்டு வரலாம். விவசாய நலன் கருதி அரசு எடுக்கும் நலனுக்கு கட்டுப்படுவோம், ஆனால் இந்த சட்டம் மீதான சாதக பாதகங்களை அறிந்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கலாம். பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வரை பொறுமையாக இருந்து தீர்மானத்தை கொண்டு வரலாம் என ஓ.பி.எஸ் கூறினார்.

இதற்கு பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன், “குழந்தைக்கு கூட தெரியும், இந்த சட்டத்தில் உள்ள பாதகங்கள் , ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா?” என கேள்வி எழுப்பினார்.

மீண்டும் பேசிய ஓ.பி.எஸ் சட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்களை கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கலாம் , சாதக பாதகங்கள் இன்னும் தெளிவாக கிடைக்கவில்லை என்று கூறினார்.

ஆனால் , “விவசாயிகளுக்காக ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறோம் அதனை ஆதரிக்கிறீர்களா இல்லையா ? என துரைமுருகன் கேள்வி எழுப்பிய நிலையில், துரைமுருகன் எங்களை வழியனுப்பும் நோக்கிலே பேசிக்கொண்டிருக்கிறார் என ஓ.பி.எஸ் விமர்சித்தார்.

தீர்மானத்தை அதிமுக ஏற்கும் நம்பிக்கையில் ஒரு மனதாக நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டுள்ளோம் இதனை ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். “உச்சநீதிமன்றத்தின் வழக்கு இருப்பதால் தீர்ப்பு வரும் போது அதனை பொறுத்து முடிவெடுக்கலாம்” என்றும் “விவசாயிகள் நலன் காப்பதில் அதிமுக உறுதியாக உள்ளது” என்றும் ஓ.பி.எஸ் கூறினார்.

நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது ஏன் எதிர்த்து தீர்மானம் போடவில்லை. நீங்கள் செய்ய முடியாததை நாங்கள் செய்து தருகிறோம் , எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.டெல்லிக்கு சென்று வலியுறுத்தியும் எந்த பதிலும் வரவில்லை, எனவேதான் திமுக தேர்தல் வாக்குறுதியின்படி தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, வற்புறுத்தி,பணிவோடு கேட்கிறேன் ஆதரவு தாருங்கள் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

ஆனால், தீர்மானத்தை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்தது.

இந்நிலையில் மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மாணம் பெரும்பான்மையுடன் நிறைவேறியது.

source https://news7tamil.live/resolution-passed-against-farm-laws.html