வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி கடன்கள் வழங்க இலக்கு – அமைச்சர் ஐ.பெரியசாமி

 27 08 2021 இந்த நிதியாண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி கடன்களை வழங்க தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி புதன்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெற்ற அமர்வில், கூட்டுறவுத் துறைக்கான மானியங்கள் மீதான விவாதத்தின் போது முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, பதிலளித்துப் பேசினார். “10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோது கூட்டுறவு வங்கிகளில் 15%-16% வரை விவசாயக் கடன் இருந்தது. ஆனால், அது அதிமுக ஆட்சியில் மோசமடைந்தது” என்று அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி கூறினார்.

மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளின் கடன் வழங்கும் பங்கை தற்போது உள்ள 9.5% லிருந்து 22%-25% ஆக அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

திமுக அரசு பதவியேற்ற பிறகு கூட்டுறவுச் சங்கங்கள் 2.3 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். புதிய உறுப்பினர்களுக்கு ரூ.120 கோடி கடன்களையும் வழங்கியுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகளுக்கு ரூ.80 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு குறுவை சாகுபடியின் போது வழங்கப்பட்ட தொகையை ரூ.37 கோடியைவிட இது இரண்டு மடங்கு அதிகம் என்று அவர் கூறினார்.

“புதிய உறுப்பினர்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்று முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்” என்று கூறிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 7,000 கோடி ரூபாய் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம் கருணாநிதியின் தலைமையிலான திமுக அரசு எவ்வாறு கூட்டுறவு வங்கிகளை புதுப்பித்தது என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி, முந்தைய அதிமுக அரசு 4,000 குடோன்களை கட்டியது. ஆனால், அவற்றை பயன்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். ஆனால், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 லட்சம் டன் நெல்லை இருப்பு வைக்க திமுக அரசு அவற்றை பயன்படுத்துகிறது என்று கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறை சிறப்பாக செயல்பட்டது என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கூற்றை மறுத்த, அமைச்சர் ஐ.பெரியசாமி 10 மத்திய கூட்டுறவு வங்கிகள் மட்டுமே லாபத்தை பதிவு செய்துள்ளன. மற்ற 13 மத்திய கூட்டுறவு வங்கிகள் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, இந்த நிதியாண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி கடன்களை வழங்க தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறியிருப்பது விவசாயிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-set-target-to-disburse-rs-11500-crore-loans-to-farmers-through-cooperative-banks-335976/