27 08 2021
புகழ்பெற்ற எழுத்தாளர் மகாஸ்வேதா தேவியின் சிறுகதை மற்றும் தலித் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணியின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழக மேற்பார்வை குழு (OC) ஆங்கில பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியதையடுத்து டெல்லி பல்கலைக்கழகத்துக்கு எழுத்தாளர்கள், முற்போக்காளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணியின் படைப்புகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற டெல்லி பல்கலைக்கழக கல்விக் கவுன்சில் கூட்டத்தில், 15 கல்விக் கவுன்சில் உறுப்பினர்கள் மேற்பார்வைக் குழுவின் செயல்பாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்து அறிக்கை சமர்ப்பித்தனர். பல்கலைக்கழக கற்றல் முடிவுகள் அடிப்படையிலான பாடத்திட்ட உருவாக்கத்தில் 5வது செமஸ்டருக்கான ஆங்கில பாடத்திட்டத்தில் பெரிய அளவில் நீக்கப்பட்டிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேற்பார்வைக் குழுவினர் முதலில் தமிழ் மொழியில் எழுதுகிற தலித் எழுத்தாளர்களான பாமா மற்றும் கவிஞர் சுகிர்தராணி இருவரின் படைப்புகளை நீக்க முடிவு செய்து அவர்களுக்கு பதிலாக உயர் சாதி எழுத்தாளரான ரமாபாய் படைப்புகளை சேர்த்தனர்.
இந்த மேற்பார்வை குழு திடீரென ஆங்கிலத் துறையிடம் மஹாஸ்வேதா தேவியின் புகழ்பெற்ற சிறுகதை ஒரு பழங்குடிப் பெண்ணைப் பற்றிய ‘திரௌபதி’ கதையை எந்தவித கல்வி தர்க்க காரணமும் அளிக்காமல் நீக்குமாறு கேட்டது.
அதன் அடிப்படை கல்வி மதிப்பு காரணமாக ‘திரௌபதி’ சிறுகதை 1999ம் ஆண்டு முதல் டெல்லி பல்கலைக்கழகத்தால் கற்பிக்கப்படுகிறது என்ற உண்மையைப் பொருட்படுத்தாமல் நீக்கியிருக்கிறார்கள் என்று கல்விக் குழு (Academic Council) உறுப்பினர்கள் எழுதியுள்ளனர்.
மேலும், உலக புகழ்பெற்ற எழுத்தாளராகவும், சாகித்ய அகாடமி விருது, ஞானபீட விருது மற்றும் பத்ம விபூஷண் விருதுகளைப் பெற்றிருந்த போதிலும், மகாஸ்வேதா தேவியின் எந்தவொரு சிறுகதையையும் மேற்பார்வைக் குழு ஏற்க மறுத்தது.
இந்த தன்னிச்சையான மற்றும் கல்வி மாற்றங்கள் ஆங்கில துறையின் பாடத்திட்ட குழு அல்லது பாடத்திட்ட குழு பங்களிப்பாளர்களிடருந்து எந்த கருத்தையும் பகிர்ந்து கொள்ளாமல் திணிக்கப்பட்டது என்று கல்விக் குழு உறுப்பினர்கள் கூறினர்.
மேற்பார்வை குழு எப்போதுமே தலித், பழங்குடியினர், பெண்கள் மற்றும் பாலியல் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்திற்கு எதிராக தவறான எண்ணத்தை காட்டுகிறது. மேற்பார்வைக் குழு பாடத்திட்டத்திலிருந்து இதுபோன்ற குரல்களை அகற்றுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளில் ஈடுபடுவது தெளிவாகத் தெரிகிறது… மேற்பார்வைக் குழுவில் தலித் அல்லது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினையில் சில நுண்ணுணர்வு உள்ளவர்களை கொண்டு வர வேண்டும்” என்று மேற்பார்வைக் குழுவுடன் கருத்து வேறுபாடு கொண்ட உறுப்பினர்கள் எழுதியுள்ளனர்.
மேற்பார்வைக் குழு “வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் போன்ற துறைகளை கற்றல் முடிவுகள் அடிப்படையிலான பாடத்திட்ட கட்டமைப்பின் திருத்தப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்போது முடிவில்லாமல் தொந்தரவு தொடர்கிறது. அதுவும் இந்த 5வது செமஸ்டருக்கு மட்டும் தொந்தரவு அளிக்கிறது என்று கல்விக் குழு உறுப்பினர்கள் கூறினார்கள்.
மேலும், “பி.ஏ (ஹானர்ஸ்) வரலாறு பாடத்திட்டத்தில் மாற்றங்களைச் சேர்க்குமாறு மேற்பார்வைக் குழு வரலாற்றுத் துறையை அறிவுறுத்தியது. ஆனால், அவை எதுவும் வரலாறு சார்ந்தவை அல்ல” என்று அவர்கள் கூறினர்.
தேஷ்பந்து கல்லூரியில் அரசியல் அறிவியலைக் கற்பித்து வரும், கல்விக் குழுவின் உறுப்பினர் பிஸ்வஜித் மொஹந்தி, சமூகவியலாளர் நந்தினி சுந்தரின் ‘அடித்தட்டு மக்களும் இறையாண்மையும்: பஸ்தாரின் மானுடவியல் வரலாறு’ அத்தியாயத்தில் மேற்பார்வை குழுவுக்கு பிரச்னை இருந்தது என்று கூறினார்.
அவர்கள் அதை பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், நாங்கள் அதை இறுதியாக தக்கவைத்தோம் என்று அவர் கூறினார்.
வரலாற்றுத் துறை தலைவர் சீமா பாவா, நவம்பர் 2020ல் துறை தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பே, இந்த பாடங்களில் அனைத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. எனவே இந்த விஷயத்தில் அவரால் கருத்து தெரிவிக்க முடியாது என்று அவர் கூறினார். முன்னாள் வரலாற்று துறை தலைவர் சுனில் குமார் இந்த ஆண்டு ஜனவரி 17ம் இறந்தார்.
வரலாறு மற்றும் சமூகவியல் பாடத்திட்டத்தில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது மாற்றங்கள் 2019ல் செய்யப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இந்த பிரச்சினை இப்போது பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது.
மோதி லால் ஈவினிங் கல்லூரியில் வரலாறு கற்பிக்கும் கல்விக் குழு உறுப்பினரான ராஜேஷ் சிங், “பாடங்களை முடிவு செய்யக்கூடிய ஒரே அதிகாரம் பாடநெறிக் குழுவுக்கு மட்டுமே உள்ளது. பின்னர் அது ஆசிரியர்கள், நிலைக்குழு மற்றும் கல்விக்குழுவிடம் ஒப்புதல் பெறும். மேற்பார்வை குழுவுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை. வகுப்புகள் தொடங்கிய 4-7 வாரங்களுக்குப் பிறகு ஒவ்வொரு செமஸ்டருக்கும் பாடத்திட்டத்தை அறிவிக்க தாமதப்படுத்துகிறார்கள். 6வது செமஸ்டருக்கான கற்றல் முடிவுகள் அடிப்படையிலான பாடத்திட்ட கட்டமைப்பின் பாடத்திட்டத்தை நாங்கள் அவர்களுக்குக் கொடுத்திருந்தோம். ஆனால், அவர்கள் அதை இன்னும் அறிவிக்கிறார்கள்.” என்று கூறினார்.
மேற்பார்வைக் குழு தலைவர் எம்.கே. பண்டிட், அதில் எப்போதும் கருத்து வேறுபாடு இருந்தது. இது செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். “நான் குறிப்பிட்ட விஷயங்களுக்கு செல்ல விரும்பவில்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட கதை பல ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. அதில், மேலும், திருத்தம் இருந்தால், அது நல்லது. ஒரு கற்பிப்பதற்கு ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல; கற்பிக்க தகுதியான பல எழுத்தாளர்கள் உள்ளனர்” என்று அவர் கூறினார்.
பாடத்திட்டத்திலிருந்து தலித் எழுத்தாளர்கள் மறும் மகாஸ்வேதா தேவியின் படைப்புகள் நீக்கப்பட்ட விவகாரத்தில், முன் வைக்கப்படும் சாதிவெறி குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, “எழுத்தாளர்களுடைய சாதி எனக்குத் தெரியாது. நான் சாதிவெறியை நம்பவில்லை. நான் இந்தியர்களை வெவ்வேறு சாதியினராக பார்க்கவில்லை.” என்று கூறினார்.
தமிழ் எழுத்தாளர் பாமா மற்றும் கவிஞர் சுகிர்தராணியின் படைப்புகள் டெல்லி பல்கலைக்கழகத்தில் 5வது செமஸ்டருக்கான பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு தமிழ் எழுத்தாளர்கள் கவிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி எழுத்துகளை அரசியல்-மதக் கண்ணாடி கொண்டு பார்க்காமல் நீக்கப்பட்ட பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
எழுத்தாளர், கலை விமர்சகர், கவிஞர் இந்திரன், தனது ஃபேஸ்புக் பக்கத்தி, “டெல்லி பல்கலைக் கழகத்தின் கலாச்சார வன்முறையை ஒரு எழுத்தாளன் எனும் வகையில் வன்மையாகக் கண்டிக்கிறேன். டெல்லி பல்கலைக் கழகம் ஆங்கில இலக்கிய பாடத் திட்டத்திலிருந்து எழுத்தாளர் மகாஸ்வேதாதேவியின் ‘திரௌபதை’ , எழுத்தாளர் பாமாவின் “சங்கதி’, சுகிர்தராணியின் கைம்மாறு மற்றும் என்னுடல் ஆகிய படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது ஒரு கலாச்சார வன்முறை.” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலித் எழுத்தாளர்கள் பாமா, கவிஞர் சுகிர்தராணியின் படைப்புகள் டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்தில் இடம்பெற்றிருந்த எழுத்தாளர் பாமாவின் சங்கதி, கவிஞர் சுகிர்தராணியின் கைம்மாறு, என்னுடல் ஆகிய படைப்புகளைத் துறைப் பேராசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருக்கிறது. இது ஒருதலைபட்சமான முடிவு; எவ்வகையிலும் ஏற்க முடியாது.
பெண்கள் உரிமை – ஒடுக்கப்பட்டோர் விடுதலை – மானுட மேன்மை குறித்து பல படைப்புகளை வழங்கி வரும் பாமா சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல்-மதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தை கைவிட வேண்டும். டெல்லி பல்கலைக்கழகத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர். வங்கமொழி எழுத்தாளரான மகாஸ்வேதா தேவி, ‘1084ன் அம்மா’ நாவல், ‘மார்பு கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு , ‘ஆரன்யெர் அதிகார்’ ‘ஹஜார் சவுரஷிர் மா’, ‘அம்ரிதாஷன்சார்’, ‘அக்னி கர்பா’, ‘பிஷ்-ஏகுஷ்’, ‘சோட்டி முண்டா இவான் தார் திர்’, ‘மூர்த்தி’ உள்ளிட்ட இவரது படைப்புகளை எழுதியுள்ளார்.
60 ஆண்டுகளுக்கும் மேல் சமூக அக்கறை கொண்ட ஒரு சிறந்த படைப்பாளியாகச் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் உரிமைகளுக்காக செயல்பட்டவர்.
மகாஸ்வேதா தேவி, சாகித்ய அகாடமி விருது, ஞானபீட விருது, ஆசிய நோபல் பரிசு, ராமன் மகசேசே விருது ஆகியவற்றை பெற்றுள்ளார். சமூகப்பணிகளுக்காக பத்மஸ்ரீ விருது, பத்ம விபூஷன் விருது மற்றும் மேற்குவங்க அரசின் வங்க விபூஷண் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி ஜூலை 28, 2016ல் இயற்கை எய்தினார்.
மகாஸ்வேதா தேவியின் படைப்புகள், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, ஆங்கில உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்திய எழுத்தாளர் பாமா, தனது முதல் நாவலான ‘கருக்கு’ மூலம் அறியப்பட்டார். தலித்களின் வாழ்க்கையை மிகவும் நுட்பமாக சித்தரித்த பாமாவின் படைப்புகள், சாதி பாகுபாடுகளுக்கு எதிராகவும் பெண் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் அவருடைய எழுத்துகள் காத்திரமாக வெளிப்பட்டன. சங்கதி நாவலையும் தாத்தாவும் எருமை மாடுகளும் சிறுகதை தொகுப்பு உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகி உள்ளது.
கவிஞர் சுகிர்தராணி, ‘கைப்பற்றி என் கனவு கேள்’ கவிதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் கவிஞராக அறிமுகமானார். இரவு மிருகம், காமத்திப்பூர், தீண்டப்படாத முத்தம், அவளை மொழிபெயர்த்தல் ஆகிய கவிதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். சுகிர்தராணி தனது கவிதைகளில், தலித்களின் கோபத்தையும் பெண் உடலையும் மிகவும் காத்திரமாக எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
source https://tamil.indianexpress.com/literature/dalit-writer-bama-poet-sukirtharani-mahasweta-devi-works-removed-from-english-syllabus-delhi-university-comes-under-fire-336216/