பள்ளி, கல்லூரி அருகே தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 31 08 2021
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் கேள்வி நேரத்துடன் இன்று தொடங்கியது. அப்போது, பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, குட்கா, புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாகக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், போதைப் பொருள் விற்பனை முழுமையாக தடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை தொடர்பாக 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11 ஆயிரத்து 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கஞ்சா மற்றும் இதர போதை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 2 ஆயிரத்து 458 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 413 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், 81 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பள்ளி கல்லூரிகள் அருகே போதை பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், போதைப் பொருள் விற்பனை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், போதைப் போருள் விற்பனையை தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு ஊக்கத் தொகை மற்றும் இதர சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
source https://news7tamil.live/severe-punishment-for-selling-gutka-near-school-colleges-cm.html