வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

ரேஷன் கடைகளில் இனி தரமான அரிசி: தமிழக அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு

 26 08 2021 சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது.

தனது துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாத்திற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தரமான அரிசியை வழங்க தமிழ்நாடு அரசு உறுதியேற்றுள்ளதாகவும், ரேஷன் கடைகளுக்கு அரிசி விநியோகம் செய்யும் ஆலைகள், இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் ‘கலர் ஷேடிங்’ என்ற, அரிசியை தரம் பிரிக்கும் இயந்திரத்தை நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த இயந்திரங்கள் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் நடத்தும் நவீன அரிசி ஆலைகளிலும் நிறுவப்படும் என்றார். முந்தைய அதிமுக அரசு 1.5 லட்சம் மெட்ரிக் டன் தரமற்ற அரிசியை பிடிஎஸ் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதாகவும் ஏற்கனவே கூறியிருந்தார்.

திமுகவின் எம் பன்னீர்செல்வம் மற்றும் காங்கிரஸின் எஸ் ராஜேஷ்குமார் ஆகியோர் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். திமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் கூறுகையில், “எங்கள் மாவட்டத்தை ஆய்வு செய்தபோது அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். அமைச்சர், அரிசியை விநியோகிப்பதை நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ”என்றார்.

கிளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் இதே கோரிக்கையை முன்வைத்து பிடிஎஸ் அரிசியின் தரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசிடம் முறையிட்டார்.மேலும், பல ஏழை குடும்பங்கள் அரிசி பெறவில்லை, ஏனெனில் அவர்களின் அட்டைகள் முன்னுரிமை இல்லாத வீட்டுப் பிரிவின் கீழ் உள்ளதாக கூறினார்.

குளித்தலை எம்எல்ஏ ஆர் மாணிக்கம் கூறுகையில், தரமற்ற வேகவைத்த அரிசி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து ரேஷன் கடைகளில் விநியோகிக்க வாங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக 9.5% அரிசி வீணாகிறது. அரிசி வீணாவதால் மாநில அரசு இழப்பை சந்தித்து வருகிறது என தெரிவித்தார்.

இந்த புகார் தொடர்பாக 24 மாவட்டங்களில் கள ஆய்வு செய்து அட்டைதாரர்களுக்கு தரமான அரிசியை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், ரேஷன் கார்டுகளின் தவறான வகைப்பாடு குறித்து துறை ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-sakkarapani-said-govt-supply-quality-rice-through-ration-shop-soon-335949/