21 08 2021 தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்கைக்கு திரும்பி வரும் நிலையில், தியேட்டர்கள் பார்க் உள்ளிட்ட சிலவற்றிற்கு தளர்வுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாளுடன் நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கில் தளர்கள் அறிவிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இன்று காலை தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 6-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பயிற்சிகள் மற்றும் நீச்சல் குளங்களில் 50 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்து.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் உயிரியல் பூங்கா, தாவரவியல் பூங்கா, மற்றும் படகு இல்லங்கள் செயல்பட அனுமதி
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
இதுவரை இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த அனைத்து கடைகளும் தற்போது ஆகஸ்ட் 23 முதல் இரவு 10 வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து கடை பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
50 சதவீத இருக்கை வசதிகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 23-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ள நிலையில், தியேட்டர்கள் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 1 முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகள் அனைத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நடத்த வேண்டும் என்றும், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படுவது குறித்து செப்டம்பர் 5-ந் தேதிக்கு மேல் ஆலோசித்து அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கல்லூரிகளும் வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், இதில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தங்கும் விடுதிகள் கேளிக்கை விடுதிகளில் செயல்படும் என்றும், கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கடற்கரைகளில் உள்ள சிறு மற்றும் குறு வியாபாரிகள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-covid-lockdown-extended-two-weeks-more-334646/