மத்திய அரசு பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மதுரை-நத்தம் இடையே அமைக்கப்பட்டு வரும் சாலையில், கட்டப்பட்டுவரும் மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உ.பி-யைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விபத்துக்கு அதிர்ச்சி தரும் காரணங்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தின் முதல் திட்டமாக மதுரை-நத்தம் இடையே ரூ.980 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சாலை 44.3 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.
இந்த சாலையில் மதுரையில் இருந்து ஊமச்சிக்குளம், செட்டிக்குளம் வரை உள்ள 7.3 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட பறக்கும் சாலை மேம்பாலமும், செட்டிக்குளத்தில் இருந்து நத்தம் வரை உள்ள 33.4 கி.மீ. தூரத்திற்கு சாலையும் அமைக்கப்படுகிறது. இது தமிழகத்தின் 2வது மிக நீளமான மேம்பாலம் என்று கூறுகிறார்கள்.
இந்த உயர்மட்ட மேம்பாலத்தில் இருந்து நகர் பகுதியில் கீழே இறங்குவதற்காக பல்வேறு இடங்களில் இணைப்பு பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி நாகனாகுளத்தில் இருந்து பாலத்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் தனித்தனியே இணைப்பு பாலம், உயர்மட்ட மேம்பாலத்தின் இருபுறமும் கட்டப்பட்டு வருகிறது.
இதில் இணைப்பு பாலத்தின் நீளம் சுமார் 800 அடி அகலம் கொண்டது. மேம்பாலத்திற்கு 114 அடிக்கு ஒரு தூண் என்ற அடிப்படையில் 7 தூண்கள் அமைக்கப்பட்டு இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. அதில் 4 மற்றும் 5-வது தூண்களை இணைக்கும் பாலத்தின் மட்டத்தை சரி செய்யும் பணிகள் நேற்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது. இந்த பணிக்காக ஹைட்ராலிக் எந்திரம் மூலம் பாலத்தின் ஒரு பகுதி தூக்கி நிலை நிறுத்தப்பட்டு இருந்தது. 4-வது தூணில் நின்று 2 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஹைட்ராலிக் ஜாக்கியில் இருந்து இணைக்கப்படும் பிரஷர் குழாய் திடீரென்று அறுந்து கீழே விழுந்தது. உடனே ஜாக்கியும் கீழே விழுந்தது. இதனால், பாலமும் இடிந்து கீழே விழுந்தது.
இந்த விபத்தின்போது, இணைப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 2 தொழிலாளர்களும் மேலே இருந்து கீழே விழுந்தனர். இதில், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் (27) உயிரிழந்தார். மற்றொரு பணியாளர் சுராஜ் குமார் காயமின்றி தப்பினார்.
மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியினை மேற்கொண்டனர். பேரிடர் மீட்பு படையினரும் வந்து ஆய்வு செய்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேறு யாரும் சிக்கவில்லை.
மதுரையில், மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக, பணிகளை மேற்கொள்ளும் நிறுவன திட்ட பொறுப்பாளர் உள்பட 3 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு அதிர்ச்சி தரும் காரணங்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், “முக்கியமாக இந்த பகுதியில் அடிக்கடி கீழே பயணம் மேற்கொள்ளும் மக்கள், அருகில் குடியிருக்கும் மக்கள் இந்த விபத்து காரணமாக கலக்கம் அடைந்துள்ளனர். கட்டுமானத்தின் உறுதி தன்மை குறித்தும், மக்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. மதுரையை இந்த சம்பவம் உலுக்கி உள்ள நிலையில், இதற்கு என்ன காரணம் என்று விளக்கி இருக்கிறார். அவர் அளித்த பேட்டியில் , இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என்று கூறியுள்ளார்.
ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் முறையாக ஆய்வு செய்யப்படாமல், முறையாக பராமரிக்கப்படாமல் பயன்படுத்தி உள்ளனர். இது விபத்துக்கு முக்கிய காரணம். அதேபோல் இந்த பாலத்தின் கட்டுமானத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் முறையாக பயிற்சி பெறவில்லை. ஊழியர்களுக்கு எப்படி இயந்திரங்களை இயக்க வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்படவில்லை.
இதுவும் விபத்திற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. பாலத்தின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மேற்கொண்டு முடிவு எடுப்பார். இது தொடர்பாக விசாரணை நடக்க உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மூலம் பாலம் கட்டும் ஒப்பந்ததாரரிடம் எங்கே தவறு நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/madurai-flyover-accident-minister-ptr-palanivel-thiagarajan-criticise-constructions-336969/