புதன், 25 ஆகஸ்ட், 2021

பயிர்க்கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி முறைகேடு – அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

 25 08 2021 

பயிர்க்கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், நாமக்கல், சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ.503 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் கூட்டுறவுத்துறைத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அவர், பயிர்கடன் தள்ளுபடியை பொறுத்தவரை 81% பேருக்கு ரசீது வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். சாகுபடி பரப்பளவு, பயிருக்கு வழங்க வேண்டிய கடனை விட பல மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும் அதன் மூலம் ரூ.516 கோடி முறைகேடாக வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

சேலம் மற்றும் நாமக்கல்லில் மட்டும் 503 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார். கடன் தள்ளுபடியை எதிர்நோக்கி ஒரு நாளைக்கு முன்பாகவே திட்டம் போட்டு தள்ளுபடி செய்திருப்பதாகவும், பயிர்க்கடன் வழங்கும் போது கூட்டுறவு சங்கங்கள் ஏனைய வசூலையும் கடனாக கொடுத்து விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் 6 தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் 66 விவசாயிகளுக்கு பிப்ரவரி 21ம் தேதி 54.50 லட்சம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும், சேலத்தில் 12 தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் 2698 உறுப்பினர்களுக்கு ரூ.4.96 கோடி மட்டுமே வழங்க வேண்டும் என்ற நிலையில் ரூ.16.70 கோடிவழங்கப்பட்டுள்ளதாகவும் ஐ பெரியசாமி விளக்கினார்.

முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஊரான கோச்சடையில் கூட அதிகமாக பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். 5 பவுன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 13.91 லட்சம் பேர் பல வங்கிகளில் ரூ.5,896 கோடி கடன் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்களின் பட்டியல் தயார் செய்துவருவதாகவும் தகுதியுள்ள நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான முடிவை முதலமைச்சர் எடுப்பார் எனவும் அமைச்சர் ஐ பெரியசாமி பதிலளித்தார் . கூட்டுறவு வங்கியில் முறைகேடாக கடனை பெற்று கந்துவட்டிக்கு விடுகிறார்கள் எனவும் இது சாதாரண மக்களின் வரிப்பணம் என்பதால் ஏழைகளுக்கு சென்றடைய வேண்டும் எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

source https://news7tamil.live/iperiyasamy-on-waiving-debts.html

Related Posts: