வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

சட்டசபை ஹைலைட்ஸ்

 26 08 2021 Tamil Nadu budget 2021

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்பு, புதிய கல்லூரிகள் அறிவிப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடந்தது.

தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

7.5% இடஒதுக்கீடு மசோதா

தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு  7.5% இடஒதுக்கீடு வழங்கும்  சட்டமசோதாவை சட்டசபையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

மசோதாவை தாக்கல் செய்து பேசிய முதல்வர், தொழிற்கல்வி படிப்புகளில், நகர்ப்புறங்களிலுள்ள தனியார் பள்ளி மாணவர்களை விட, கிராமப்புற மாணவர்களின் குறைவான சேர்க்கையை கருத்தில் கொண்டு, 1997 ஆம் ஆண்டு கிராமப்புற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டண சலுகை அளிக்கப்பட்டது.

மேலும், தொழிற்கல்வி படிப்புகளுக்கு 2006 ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக அரசுப்பள்ளி மாணவர்கள் விரும்பும் உயர்கல்வியை பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. உயர்கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு கிடைப்பதில்லை.

ஏற்கனவே மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. என்று கூறினார்.

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்து ஆராய அமைக்கப்பெற்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன் வடிவை ஒரு மனதாக நாங்களும் ஆதரிக்கிறோம். பெரும்பாலும் ஏழை, எளிய, நடுத்தர குடும்ப மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். அவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி கற்க முடியாத சூழல் உள்ளது” என்று கூறினார்.

இதனையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு, எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

10 புதிய கல்லூரிகள்

உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

திருச்சுழி, திருக்கோவிலூர், ஏரியூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், ஆலங்குடி, சேர்காடு, தாளவாடி, மானூர் ஆகிய 9 இடங்களில் இருபாலர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கூத்தாநல்லூரில் மகளிர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், திருப்பூர் அரசு கலைக் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் பாடப் பிரிவு தொடங்கப்பட உள்ளது. மேலும், வெவ்வேறு பாடப் பிரிவுகளிலிருந்து 100 பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கப்பட உள்ளது,  என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்பு

உயர்கல்வித்துறையின் மானிய கோரிக்கையின்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகம் விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன் புகார் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவானதை காழ்ப்புணர்ச்சியோடு தடுப்பதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை. அரசுக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது. அப்படி இருந்திருந்தால் அம்மா உணவகம் இருந்திருக்காது. இந்த அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது, என்று கூறினார். 

இதுதொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது அதிமுக. அரசு. நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள இசைப் பல்கலைக்கழகம் ஜெயலலிதா பெயரில் தான் தொடர்ந்து இயங்கி வருகிறது, என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 

கவிமணி விருது

சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, குழந்தை எழுத்தாளர்களுக்கு ‘கவிமணி விருது’ வழங்கப்படும் என அறிவித்தார். 

இந்த விருதுக்கு,  18 வயதுக்கு உட்பட்டோர்களில் ஆண்டுதோறும் 3 சிறப்பு எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும், அவர்களுக்கு ரூ.25,000 ரொக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும் என அறிவித்தார். 

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-highlights-7-5-reservation-bill-jayalalitha-university-336161/