சென்னை புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில தொடர்புடைய 2 பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் கே.பி.பார்க் என்னும் பெயரில் குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு தரமற்றதாகவும், கட்டிடத்தின் சுவர்கள், குடிநீர் குழாய்கள், லிப்ட் மற்றும் இதர வசதிகள் அனைத்து சேதமடைந்து மோசமான நிலையில் இருப்பதால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த குடியிருப்பில் வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு மற்றும் அன்பரசன் இருவரும் நேரில் ஆய்வு செய்த நிலையில், ஐஐடி சார்பில் கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அமைச்சர் அன்பரசன் மற்றும் சேகர் பாபு இருவரும் கட்டிடம் கட்டியதில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்தால் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தனர்.
மேலும் இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், இந்த குடியிருப்பு கட்டியதில் பணியாற்றிய உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், தரமற்ற குடியிருப்பை கட்டிய ஒப்பந்ததாரரை பிளாக் லிஸ்ட்டில் சேர்ப்போம். இந்த வழக்கு குறித்து விரைவாக விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-two-engineers-suspended-for-puliyanthoppu-housing-issues-334364/