இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும் என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் தனி முகாமில் உள்ள பலர், தங்களுக்கு இந்திய குடியுரிமை கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவில், ‘‘நாங்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் எங்களின் மூதாதையர்கள் இலங்கையிலுள்ள தேயிலை தோட்டங்களுக்கு கூலி தொழிலாளர்களாக சென்றனர். 1983ல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால், உயிருக்கு பயந்து தமிழகம் வந்தோம். எங்களை அகதிகளாக கருதாமல், தாயகம் திரும்பியவர்களாக கருதி இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி துரைச்சாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத்தரப்பில், “இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், எனவே அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விஷயத்தில் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க முடியாது. சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும்” என தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், “தமிழக அரசு மற்றும் எதிர் மனுதாரராக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு அனுப்பிய நோட்டீஸ் சரியாக சென்று சேரவில்லை. எனவே, தமிழக அரசு மற்றும் எதிர் மனுதாரராக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம்” எனக்கூறி, வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/centre-tells-high-court-citizenship-srilankan-refugees-decided-within-frame-of-law-335316/