9 1 2022 இந்தியாவில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், தற்போது பாதிப்புகள் மிகவும் லேசான அளவிலே தென்படுவதாக கூறிய நிபுணர்கள், மருத்துவமனையில் மிகவும் குறைந்த அளவில் மக்கள் அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் வசதி வழங்குவது கடந்த 24 மணி நேரத்தில் திடீரென 264 சதவீதம் அதிகரித்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, வெள்ளிக்கிழமை வெறும் 62 பேருக்கு மட்டுமே ஆக்சிஜன் வசதி வழங்கிவந்த நிலையில், தற்போது 226 பேருக்கு ஆக்சிஜன் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 264 சதவீதம் அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை 2,901 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சனிக்கிழமை 3,643 ஆக அதிகரித்தது. ஜனவரி 1 ஆம் தேதி 24 பேர் மட்டுமே ஆக்சிஜன் வசதியில் இருந்தனர். அப்போது, கொரோனாவுக்கு 332 என்ற கணக்கில் தான் பதிவானது.
இதற்கிடையில், நிலை 3 ஆதரவில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 20 இல் இருந்து சனிக்கிழமை 55 ஆக அதிகரித்துள்ளது. இது ஒரே நாளில் 175% அதிகரித்துள்ளது.
அதே காலகட்டத்தில், வென்டிலேட்டரில் இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 6இல் இருந்து 11 ஆக அதிகரித்தது. ஜனவரி 1 ஆம் தேதி, எந்த நோயாளிகளும் வென்டிலேட்டர் ஆதரவில் இல்லை. அப்போது, எட்டு நோயாளிகள் மட்டுமே நிலை 3 ஆதரவில் இருந்தனர்.
மாநிலத்தின் தொற்று பாதிப்பு விகிதம் 11.75இல் இருந்து 14.64 ஆக அதிகரித்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி, கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2.02 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/india/punjab-sees-264-percent-rise-in-patients-on-oxygen-support-in-24-hours-394669/