புதன், 5 ஜனவரி, 2022

மக்கள் தொகை கணக்கெடுப்பு: அதிகார வரம்பு மாற்றங்களை மேற்கொள்ள ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு

  மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும் கூட, மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அதிகார வரம்பு மாற்றங்களை முடிக்க காலக்கெடுவை ஜூன் 20,2022 வரை நீட்டித்துள்ளது. இதற்கு முன்பு டிசம்பர் 31, 2021-க்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு காரணங்களுக்காக தேவையான அதிகார வரம்பு மாற்றங்களை அறிவிக்கவில்லை என்று கூறிய கூறி கேட்டுக் கொண்ட காரணத்தால் இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று
இந்தியாவின் தலைமைப் பதிவாளர் பணிகளை மேற்பார்வையிடும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் முன்பும், மாநில அரசுகள், மாவட்டங்கள், கிராமங்கள், நகரங்கள் மற்றும் இதர நிர்வாக அலகுகளான தாலுக்காக்கள், காவல் நிலையங்களில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை பட்டியலிட்டு இந்திய தலைமைப் பதிவாளருக்கு (Registrar General of India) அனுப்ப வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே இப்பணிகளுக்காக நிர்வாக அலகுகள் முடக்கப்படும். இந்த காலகட்டத்தில், தரவு தொகுக்கப்பட்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் ஆர்.ஜி.ஐக்கு அனுப்பப்படும்.

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அதிகார வரம்பு மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பை தலைமை பதிவாளர் அலுவலகம் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி அன்று வெளியிட்டது. தங்கள் மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களை பட்டியலிட்டு அனுப்ப மாநில அரசுகளுக்கு ஜனவரி 31,2020-ஐ காலக்கெடு விதிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி அன்று அதிகார வரம்புகளை முடக்க காலக்கெடுவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகளை பட்டியலிடும் பணியை 2020ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 2020 வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதே காலத்தில் தான் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயார் செய்யவும் நேரம் ஒதுக்கப்பட்டது. இது தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயார் செய்வதற்கு முதல்படியாகும்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டும் குடியுரிமை திருத்த சட்டத்தின் காரணமாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. பல்வேறு மாநில அரசுகள் வெளிப்படையாக இவைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பும், அதிகார வரம்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு முறை ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அது தொடர்பான அனைத்து களப்பணிகளும் அடுத்த உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு நிர்வாக அலகுகளை உருவாக்குதல், நீட்டித்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான விளக்கங்கள் மற்றும் அனுமதி கோரி பல மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன என்று மாநில அரசுகளுக்கு தலைமை பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது.

எனவே நிர்வாக வரம்பு எல்லைகளை முடக்க 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்படுகிறது என்றும், அனைத்து அதிகார அலகுகளும், 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக டிசம்பர் 31ம் தேதி முதல் முடக்கப்படும். நிர்வாக எல்லைகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் 31-12-2020க்குள் சமீபத்திய நடைமுறைக்கு வரலாம். ஆனால் 31-12-2020 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையும் வரை எந்த விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறகு பல்வேறு காலங்களில் இதன் காலக்கெடு மாற்றம் செய்யப்பட்டு வந்தது. 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி என்று காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது நிர்வாக அலகுகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான காலக்கெடு தற்போது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு 640 ஆக இருந்த இந்திய மாவட்டங்கள் தற்போது 736 ஆக அதிகரித்துள்ளது என்று ஆர்.ஜி.ஐ. தகவல் கூறுகிறது.

source https://tamil.indianexpress.com/india/rgi-extends-deadline-for-jurisdictional-changes-for-census-till-june-30-392091/