தமிழகத்தில் 2022-ம் ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் முதல் நாளான நேற்று ஆளுநர் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 2-வது நாளான இன்று கேள்வி நேரம் தொடங்கப்பட்டது. இதில் எதிர்கட்சிகள் முன்வைத்த கேள்விகளுக்கு ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பதில் அளித்து பேசினர்.
முன்னதாக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியபோது மறைந்த 12 முன்னாள் அமைச்சர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னாள் ஆளுநர் ரோசையா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 14 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தொடரில் பேசிய முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அம்மா உணவகத்தை மூடும் முயற்சியில், திமுக அரசு செயல்படுகிறது. அப்படி அம்மா உணவகத்தை முடினால், அதற்காக தண்டனையை அனுபவிப்பார்கள் என்று கூறியிருந்தார்.
எதிர்கட்சி தலைவரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் கலைஞர் பெயரில் இருந்த திட்டங்களை முடக்கியதால் தான் ஆட்சியை இழந்தீர்கள் என்று கூறினார். மேலும் அம்மா உணவகத்தை மூடினால் என்ன, திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் மூடப்பட்டது. நாங்கள் ஒரு திட்டத்தை மூடினால் என்ன தவறு என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
அதேபோல் அம்மா கிளினீக் மூடியது குறித்து அதிமுக தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அம்மா கிளினீக் தேவையில்லாதது அதனால் முடியாதாக முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
அதன்பிறகு ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக நிகழ்ழும் தற்கொலைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்டம் குறித்து எங்களின் முந்தைய 2001 ம் ஆண்டு ஆட்சியிலேயே தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டங்கள் மற்றும் காவல் சட்டங்கள் திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறிவிட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஒமிக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த கூடுதல் படுக்கை வசதிகளை செய்து தர வேண்டும் என்று எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்த நிலையில், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்கட்சித் தலைவர் பேச வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, 10.5% இடஒதுக்கீட்டில் சிக்கல்களை களைய நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி என்று கூறினார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார். மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் திமுக எடுக்கும் முயற்சிகளுக்கு பாமக துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் மதுக்கடைகளால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் அதனை மூட வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் பல்கலைகழகங்களில் துணைவேந்தர் நியமனம்தொடர்பாக மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து வரும் மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீமானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து அனைத்து கட்சி குழுவினரை சந்திக்க உள்துறை அமைச்சர் மறுத்து வருகிறார் – இதனால் உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு விவகாரததில் திமுகவடன் இணைந்து செயல்பட தயார் என்றும், நீட் விலக்கு மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்றும் அதிமுக எம்எல்ஏ வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மழை வெள்ளம் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சரியாக வடிவமைக்காத காரணத்தால், சென்னை. தீ நகரில் மழை வெள்ளம் அதிகளவில் தேங்கியதாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்போது நிறைய விதி மீறல்கள் நடந்துள்ளதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிப்பதுடன் சட்டசபை கூட்டம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-highlights-update-in-tamilnadu-assembly-news-393535/