6 1 2022 தமிழகத்தில் பல்கலைகழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், முதல நாளில் ஆளுநர் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து 2-வது நாளான இன்று சட்டப்பேரவையின் கேள்வி பதில் நேரம் நடைபெற்றது.
இந்த நேரத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, பல்வேறு மாநிலங்களில் பல்கலைகழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வேண்டும் அதற்கு அதிகாரம் இருக்கிறது. இதில் ஆளுநர் தலையிட கூடாது என்று பல மாநிலங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஜிகே.மணியின் இந்த கருத்துக்கு பதில் அளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், பல மாநிலங்களில் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக வெவ்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. மேற்கு வங்கத்தில் மாநில அரசே துணை வேந்தர்களை நியமனம் செய்கிறது. அதே சமயம் கேரளாவில் துணை வேந்தர் நியமன உரிமை மாநில அரசுக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று பல மாநிலங்களில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல கருத்துக்கள் எழுந்துள்ளன. இதில் குஜராத் மாநிலத்தில் பல்கலைகழக துணைவேந்தர்களை நியமனம் செய்யும் உரிமை அம்மாநில அரசுக்கே இருந்துள்ளனது. தற்போதைய பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது துணைவேந்தர்கள் நியமனம் செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இருந்துள்ளது. இதை பாஜக உறுப்பினர்கள் பிரதமரிடம் எடுத்துக்கூற வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சட்டசபை கூட்டத்தொடர் முடிவதற்குள்ளாகவே முதல்வர் இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஜிகே மணி கூறியது போன்று இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வதற்கான தீர்மானம் ஒன்று வரும் மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-speech-about-appointment-of-vice-chancellors-in-university-393506/