புதன், 5 ஜனவரி, 2022

வங்கிக் கடன் வாங்கிய விவசாயிக்கு பகீர் மிரட்டல்… ஆடியோவில் சிக்கிய பெண் அதிகாரி!

விழுப்புரம் அருகே வங்கிக் கடனை வசூலிக்க விவசாயியிடம் தற்கொலைக்கு தூண்டும் விதமாக தனியார் நிறுவன அதிகாரி மிரட்டியிருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனாத் மங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயில் ரகோத்தமன். இவர் இந்தியன் வங்கியில் ரூ.30,000 கடன் பெற்றுள்ளார். கடனை வசூலிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் பெண் அதிகாரி ஒருவர் விவசாயியை மிரட்டியிருப்பது தெரியவந்துள்ளது. 


கடனை வசூலிக்க அடாவடியாக பேசிய அந்த தனியார் நிறுவனத்தின் பெண் அதிகாரி, விவசாயியை தற்கொலைக்கு தூண்டும் விதமாக மிரட்டல் விடுத்திருக்கிறார். தனியார் நிறுவனத்தின் பெண் அதிகாரி, விவசாயியை போனில் மிரட்டும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், அந்த பெண் அதிகாரி, ரிலையன்ஸ், ரிலையன்ஸ் ஏ.ஆர்.சி.யில் இருந்து பேசுகிறோம் என்று கூறுகிறார். பின்னர், நீங்கள் இந்தியன் வங்கியில் லோன் எடுத்திருக்கிறீர்கள் இல்லையா என்று கேட்கிறார். அதற்கு விவசாயி, இந்தியன் வங்கியில் லோன் வாங்கி இருக்கிறேன். அதில் உங்களுக்கு என்ன என்று கேட்கிறார். அதற்கு அந்த அதிகாரி, “ஏன் உங்க பேங்க்ல சொல்லையா. ரிலையன்ஸுக்கு ஃபார்வர்டு பண்ணிட்டாங்க அந்த கேஸ்னு” என்று கூறுகிறார். அதற்கு விவசாயி ரகோத்தமன், அதெப்படி, இந்தியான் பேங்க்ல கடன் வாங்கினால், ரிலையன்ஸ்க்கு ஃபார்வர்டு பண்ணுவாங்க? யாருமா கடன் கொடுப்பது யாருமா கடன் கேட்பது என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண், “ஆமாம், நீங்கள் வருஷ கணக்கா, கடன் கட்டாம உக்காந்துட்டு இருப்பீங்க, ரிலையன்ஸ் எடுத்துக்கொண்டுவிட்டார்கள். நீங்கள் இப்போது ரிலையன்ஸ்க்கு டேக் ஓவர் பண்ணிட்டாங்க. அதனால், நீங்கள் எங்களுக்குதான் பதில் சொல்ல வேண்டும்” என்று கடுமையாகக் கூறுகிறார். அதற்கு விவசாயி, நான் உங்களிடம் கடன் வாங்கவில்லை. உங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறுகிறார்.

அதற்கு அந்த பெண் அதிகாரி, “யோவ் நான் தான்யா கால் பண்ணேன், இந்த லா எல்லாம் பேசிகிட்டு இருக்காத, லோன் வாங்கிட்டு நீ பாட்டுக்கு ரிலையன்ஸ்ல எதுக்கு பேசுறாங்கனு கேட்கிற,” என்று கடுமையாக மிரட்டுகிறார்.

அதற்கு விவசாயி, “யோவ் என்று மரியாதைக் குறைவாகப் பேசினால், நாளைக்கு உங்கள் அலுவலகத்துக்கு வந்து சாலையில் மறியல் செய்து போராட்டம் நடத்துவோம். கலெக்டரிடம் புகார் அளிப்போம்” என்று கூறுகிறார்.

அதற்கு அந்த பெண் அதிகாரி என்னுடைய பெயர் அஸ்வினிதான், போய் கலெக்டர்கிட்ட சொல்லு என்று கூறுகிறார்.

விவசாயி, “கடன் உங்களிடமா வாங்கினோம்” என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண் அதிகாரி மிகவும் திமிராக “ஆமாம், எங்ககிட்டதான் வாங்கினீங்க” என்று கூறுகிறார்.
விவசாயி, “நாங்க உங்ககிட்ட கடன் வாங்கல, கவர்மெண்ட்ல கடன் வாங்கினோம்” என்கிறார்.

அதற்கு அந்த பெண் அதிகாரி, “கவர்மெண்ட்ல கொடுத்தாங்கலா, அதனால, கட்டாம விட்ருவீங்களா என்ன? ஏமாத்திடுவீங்களா என்ன?” என்று கேட்கிறார்.

அதற்கு விவசாயி, “ஏமாத்திடு வெளிநாட்டுக்கு போயிட்டானே அவனை என்ன பண்ணீட்டீங்க,” என்று கேட்கிறார்.

அதற்கு அந்த பெண் அதிகாரி, “அவன் கதையெல்லாம் உனக்கு வேணாம்” என்று கூறுகிறார்.

விவசாயி, “ஏன் அவன் கதையெல்லாம் வேணாம், நாங்க சில்ற காசு வாங்கினோம்.” என்று கூறுகிறார்.

தனியார் நிறுவன அதிகாரி, “அவர் டாக்குமெண்ட் கொடுத்து கடனைக் கூட கட்டிவிட்டார். அது தெரியுமா?” என்று கேட்கிறார்.

அதற்கு விவசாயி, “அவர் எந்த கடனை கட்டிவிட்டார்.” என்று கேட்கிறார்.

தனியார் நிறுவன பெண் அதிகாரி, “அவன் கட்டினால்தான் கட்டுவீங்களா என்ன? அவன் சாப்பிட்டால்தான் சாப்பிடுவீங்களா, அவன் செத்துட்டா செத்துடுவீங்களா?” என்ன என்று கேட்கிறார்.

அதற்கு விவசாயி, “அப்போ என்ன சாவ சொல்றீங்களா? உங்ககிட்ட கடன் வாங்கிட்டா எங்களை சாவ சொல்றீங்களா? நாளைக்கு கூட்டி பார்ப்போம்.” என்று கூறுகிறார்.

அதற்கு அந்த தனியார் நிறுவன பெண் அதிகாரி, “எங்களுக்கு தெரியாது. நீங்கள் செத்தால்கூட, கடனைகட்டிட்டு செத்துபோங்க” என்று விவசாயியை தற்கொலைக்கு தூண்டும் விதமாக பேசுகிறார்.

விவசாயியிடம் கடனை வசூலிக்க முயன்ற தனியார் நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர், விவசாயியை தற்கொலைக்கு தூண்டும் விதமாக பேசியிருப்பது விவசாயிகள் மத்தியில் கலக்கத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/private-company-officer-threatening-farmer-to-pay-loan-shocking-audio-392520/